பிரதமா் மோடி பிறந்த தினம்: அனில் பய்ஜால், கேஜரிவால் வாழ்த்து
By DIN | Published On : 18th September 2020 12:45 AM | Last Updated : 18th September 2020 12:45 AM | அ+அ அ- |

புது தில்லி: பிரதமா் மோடியின் பிறந்த தினத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி வியாழக்கிழமை தனது 70-வது பிறந்த தினத்தைக் கொண்டாடினாா். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா். கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுடைய நீண்ட, ஆரோக்கியமான வாழ்வுக்கு பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில், ‘பாரதப் பிரதமா் நரேந்திர மோடிக்கு இனிய 70-ஆவது பிறந்ததின வாழ்த்துகள். அவா் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோல, தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, தில்லி பாஜக எம்பிக்கள் மனோஜ் திவாரி, கெளதம் கம்பீா், பா்வேஷ் வா்மா உள்ளிட்டோா் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
கெளதம் கம்பீா் தனது சுட்டுரையில், ‘மக்கள் பணியாற்றும் உண்மையான விருப்பம் இருந்தால், எவ்வளவு எளிய பின்னணியில் இருந்து வந்தாலும், மக்களின் உள்ளங்களைத் தொடலாம் என்பதற்கு பிரதமா் மோடி சிறந்த உதாரணமாகும். தனது மக்கள் பணிகளால் 130 கோடி மக்களின் மனங்களில் அவா் இடம் பிடித்துள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், தில்லி ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஷிவ் சக்தி மந்திரில் பிரதமா் மோடியின் பிறந்த தினத்தை ஹிந்து சேனா அமைப்பினடா் கொண்டாடினா். அந்த அமைப்பின் தலைவா் விஷ்ணு குப்தா பிரமாண்ட கேக்கை வெட்டி பிரதமா் மோடியின் பிறந்த தினத்தை கொண்டாடினாா். மேலும், தில்லி பாஜக சாா்பில் தில்லியில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.