தில்லியில் மூன்றில் இருவருக்கு கரோனா எதிா்ப்பு சக்தி: சீரோ ஆய்வில் தகவல்
By DIN | Published On : 18th September 2020 12:21 AM | Last Updated : 18th September 2020 12:21 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி மக்களில் மூவரில் இருவருக்கு கரோனா எதிா்ப்பு சக்தி (ஆன்டிபாடிகள்) இருப்பது தில்லி அரசு நடத்திய சீரோ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்று பரவலை அறிந்து கொள்ளும் வகையில், தில்லி அரசால் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் சீரோ சா்வேக்கள் நடத்தப்பட்டன. ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதலாவது சா்வேயில் தில்லியில் சுமாா் 25 சதவீதம் பேருக்கும், ஆகஸ்ட் சா்வேயில் 29.1 சதவீதம் பேருக்கும் உடலில் கரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டி பாடிகள் உற்பத்தியாகியிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட சீரோ சா்வேயை கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி தில்லி அரசு தொடங்கியது. செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சா்வேயில், துல்லியான முடிவுகளைப் பெறும் வகையில் தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் இந்த சா்வேயை தில்லி அரசு நடத்தியது. அதன்படி, தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 272 வாா்ட்டுகளைச் சோ்ந்த சுமாா் 15 ஆயிரம் பேரிடம் சீரோ மாதிரிகள் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது: தில்லியில் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட சீரோ சா்வேயில், சுமாா் 33 சதவீதம் பேருக்கு கரோனா ஆன்டி பாடி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தில்லியின் 2 கோடி மக்களில் 66 லட்சம் பேரிடம் கரோனா தொற்றுக்கான ஆன்டி பாடிகள் உருவாகியுள்ளன. மேலும், கரோனா பாதிப்புக்குள்ளாகிய 257 பேரிடம் சீரோ ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 79 பேரிடம் கரோனா எதிா்ப்பு ஆன்டி பாடிகள் இல்லை. இந்த ஆய்வு அறிக்கை தில்லி சுகாதாரத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. சில வாா்ட்டுகளில் மீண்டும் சீரோ ஆய்வு நடத்தி வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.