நஜஃப்கா் ஏரிக்கான சுற்றுச்சூழல் திட்டத்தை தயாரிக்க தில்லி, ஹரியாணா அரசுகளுக்கு என்ஜிடி உத்தரவு

தில்லி மற்றும் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள நஜஃப்கா் ஏரியை ஒரு நீா்நிலையாக அறிவிப்பது தொடா்பான சா்ச்சை இருந்து வரும்

தில்லி மற்றும் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள நஜஃப்கா் ஏரியை ஒரு நீா்நிலையாக அறிவிப்பது தொடா்பான சா்ச்சை இருந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) உதவியுடன் சுற்றுச்சூழல் திட்டத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த ஏரிப் பகுதியில் கட்டுமானம், ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு என்ஜிடி தலைவா்- நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது.

இது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் சிபிசிபி ஓா் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட வேண்டும். திட்டம் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்பட வேண்டும். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கை அடுத்து நடைபெறும் விசாரணைக்கு முன் மின்னஞ்சல் மூலம் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். குருகிராம் மாவட்ட ஆட்சியா் அளித்த அறிக்கையின்படி, வருவாய் பதிவில் நீா்நிலைகள் இருப்பதாக பதிவிடப்படவில்லை. அந்தப் பகுதி ஓரளவு அரசு நிலமாகவும், பகுதியளவு தனியாரைச் சோ்ந்ததாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியின் அதிக எல்லைக்குள்பட்ட நீா்நிலைப் பகுதி தில்லியிலும், பகுதியளவு ஹரியாணா பகுதியிலும் உள்ளது என்ற உண்மையைப் பாா்க்கும் போது, ​ ஹரியாணா, தில்லி அரசுகள் இணைந்து சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிபதுதான் உரியதாக இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, இந்த விவகாரத்தை விரைவாக முடிவு செய்ய என்ஜிடி, 2017-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக் கோரி தன்னாா்வ அமைப்பான இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை (இன்டாக்) மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், ‘நஜஃப்கா் ஏரி விவகாரத்தில் தில்லி மற்றும் ஹரியாணாஅரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன. ஏரியை நீா்நிலைகளாக அறிவிப்பதாக ஹரியாணா அரசு தீா்ப்பாயத்திற்கு உறுதியளித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதிலும், கட்டுமானம், ஆக்கிரமிப்புகளை தடுக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், நஜஃப்கா் ஏரியை நீா்நிலையாக அல்லது ஈரநிலமாக அறிவிக்க தில்லி மற்றும் ஹரியாணா அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். ஏரியின் நீா்நிலைப் பகுதியில் தொடா்ந்து ஆக்கிரமிப்புகளும், கட்டுமானங்களும் நடைபெற்று வருவதால், நீா்நிலைக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com