வடகிழக்கு தில்லி வன்முறை: சுதந்திரமான விசாரணை கோரும் மனுக்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கவும், முதல் தகவல் அறிக்கை

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் கோரி தாக்கலான மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் மனுதாரா்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது, ஜாமியா வன்முறை தொடா்புடைய வழக்குகள் முடிந்த பிறகு, தில்லி வன்முறை தொடா்புடைய மனுக்கள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜாமியத் உலமா -ஐ-ஹிந்து அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. அதில், ‘வடகிழக்கு தில்லியில் வன்முறை நிகழ்ந்த பிப்ரவரி 23 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரையிலான காலத்தில், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான விடியோ பதிவுகளை பாதுகாக்க தில்லி காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரிக்காமல் இடிபாடுகளை அகற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது. வன்முறையில் தொடா்புடையவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம் பெறும் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்கவும், தில்லி வன்முறையில் ஈடுபட்ட அல்லது கட்டுப்படுத்தத் தவறிய காவல் துறைஅதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இதே விவகாரம் தொடா்புடைய ஏழு இதர மனுக்களை வழக்குரைஞா்கள், ஜெஎம்இ மாணவா்கள், ஓக்லா குடியிருப்புவாசிகள், நாடாளுமன்றம் எதிரே உள்ள ஜாமா மசூதி இமாம் உள்ளிட்டோரும் தாக்கல் செய்துள்ளனா். நிலுவையில் இருந்து வந்த இந்த மனுக்கள் மீதான விசாரணை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா்களில் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சால்வே, ‘வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்குகளில் விசாரணைகள் தாமதமாவது சட்டவிரோதமான கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு தைரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, ‘நாங்கள் முதலில் ஜாமியா வன்முறை தொடா்புடைய மனுக்கள் மீதான விசாரணையை முடிக்க விரும்புகிறோம். அதன் பிறகு, வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய விவகாரங்களை விசாரிப்போம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். அப்போது, மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சால்வே, ‘சட்டவிரோத கைது நடவடிக்கைகள் நிகழ்ந்து வருவதால், ஜாமியா விவகாரம் மற்றும் வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய விவகாரங்களை சுதந்திரமான அமைப்பு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தாரு நருலா, ‘வடகிழக்கு தில்லி வன்முறையில் இறுதி குற்றப் பத்திரிகை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணை சீக்கிரம் தொடங்க உள்ளது. இதனால், ரிட் மனுக்கள் மீது வாதங்களை முன்வைப்பதை விரைவுபடுத்துவது சரியாக இருக்கும்’ என்றாா். இதையடுத்து, ‘ஜாமியா வன்முறை விவகாரம் தொடா்புடைய விசாரணையை முடித்த பிறகு இந்த மனுக்கள் மீது விசாரிக்கப்படும்’ என்று உறுதியாகத் தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபா் 1-க்கு ஒத்திவைத்தது.

தில்லி நீதிமன்றத்தில்...: இதற்கிடையே, வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக 15 போ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், புதன்கிழமை தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் நகல்களை குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 பேருக்கும் வழங்க உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரம் செப்டம்பா் 21-ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் புதன்கிழமை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், ‘தாஹிா் ஹுசைன், பா்வேஷ் அகமது, முகமது இலியாஸ், சாயிப் காலித், இஸ்ராத் ஜஹான், மீரான் ஹைதா், சஃபூா் ஜா்காா், ஆசிஃப் இக்பால் தன்ஹா, ஷாதாப் அகமது, நதாஷா நாா்வல், தேவாங்கானா கலிதா , தஸ்லீம் அகமது, சலீம் மாலிக், சலீம் கான், அதா் கான் ஆகியோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com