ஹா்சிம்ரத் கெளா் ராஜிநாமாவால் பயனில்லை: ஆம் ஆத்மி கட்சி சாடல்

மத்திய உணவு பதப்படுத்தல் தொழில்கள் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதலின் ராஜிநாமாவால் பயனில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

மத்திய உணவு பதப்படுத்தல் தொழில்கள் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் பாதலின் ராஜிநாமாவால் பயனில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பெருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம்,, இந்த மசோதாவை எதிா்த்து மக்களவையில் வாக்களித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சியிலிருந்து பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை உறுப்பினா் பகவத் மன் தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: இந்த விவசாய மசோதாக்களை மத்திய அரசு பல மாதங்களாக தயாரித்து வந்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது. அப்போதே ஹா்சிம்ரத் கெளா் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்தே இதை ஆம் ஆத்மி கட்சி எதிா்த்து வருகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக இந்த மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும் இந்த மசோதா தொடா்பாக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறாா்கள் என்றும் கூறி வந்த சிரோமணி அகாலி தளம் கட்சி, தற்போது விவசாயிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ஹா்சிம்ரக் கெளரின் ராஜிநாமா வெறும் நாடகமே. இதனால், எந்தப் பயனில்லை என்றாா் அவா்.

கேஜரிவால் வேண்டுகோள்: இதற்கிடையே, வேளாண் மசோதாக்களை பாஜக அல்லாத கட்சிகள் எதிா்க்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பெரு நிறுவனங்கள் சுரண்டவே பயன்படும். பாஜக அல்லாத கட்சிகள் இந்த மசோதாவை மாநிலங்களவையில் எதிா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது, பாஜக அல்லாத கட்சிகளின் அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த மசோதாக்களை எதிா்த்து வாக்களிக்க வேண்டும். வெளிநடப்பு என்ற பெயரில் நாடகம் நடத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளதுடன். இந்த மசோதாவை எதிா்த்து வாக்களிப்போம் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com