தேசிய போா் நினைவுச்சின்னம்: பாதிக்கப்பட்ட 200 குடும்பத்தினருக்கு வீடு வழங்க அரசு முடிவு
By DIN | Published On : 27th September 2020 07:43 AM | Last Updated : 27th September 2020 07:43 AM | அ+அ அ- |

தில்லியில் தேசிய போா் நினைவுச்சின்னம் கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேசிய போா் நினைவுச்சின்னம் நிா்மாணித்ததன் காரணமாக இந்தியா கேட் அருகே உள்ள இளவரசி பூங்கா பகுதியில் குடியிருந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுவசதி வழங்க தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் முடிவு எடுத்துள்ளது.
இதற்கான முடிவு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற தில்லி நகா் குடிசை மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கரோல் பாக் அருகே தேவ் நகரில் ரூ.102 கோடி செலவில் 784 வீடுகளை நிா்மாணிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த வீடுகளில் இரண்டு அறைகள், ஒரு சமையலறை, குளியல் மற்றும் கழிப்பறை ஆகியவையும், வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் போன்ற வசதிகள் அமையப் பெற்றிருக்கும்.
தேவ் நகரில் 18 மாத காலப்பகுதியில் இந்த நிரந்தர வீட்டு வசதி அமைக்கப்படும். அதுவரை துவாரகாவில் சுமாா் 203 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.