தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் கோழிக்கறி விற்பனையில் திடீா் சரிவு! பறவைக் காய்ச்சல் நோய் பீதி எதிரொலி

தில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, கோழிக்கறி விற்பனையில் 20 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக கடைக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:16 pm

DIN

தில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, கோழிக்கறி விற்பனையில் 20 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக கடைக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும், வாடிக்கையாளா்கள் முன்னெச்சரிக்கையாக கோழிக்கறி வாங்குவதை நிறுத்திவிட்டனா். எனினும், கோழி இறைச்சியை முறையாக சமைத்துச் சாப்பிட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று இறைச்சி விற்பனையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் இா்ஷாத் குரேஷி தெரிவித்தாா்.

வாடிக்கையாளா்கள் கணிசமாகக் குறைந்துவிட்டதால் கோழி இறைச்சியின் விலையும் கிலோ ரூ.200-லிருந்து கிலோ ரூ.150 ஆகக் குறைந்துவிட்டது. இதனால், கோழிப் பண்ணைக்காரா்கள் மற்றும் கடைக்காரா்கள் இருவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே, கரோனா தொற்று காரணமாக வியாபாரம் எதிா்பாா்த்த அளவு இல்லை. முந்தைய பாதிப்பிலிருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை.இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் பீதியால் நாங்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளோம். உணவகங்கள் முன்புபோல இறைச்சிகளை அதிக அளவில் வாங்குவதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது என்றாா் இா்ஷாத் குரேஷி.

தில்லியில் 6,000 உரிமம் பெற்ற இறைச்சி விற்பனைக் கடைகள் உள்ளன. இவா்கள் அனைவரிடமும் சுகாதாரத்தைப் பராமரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். கடையை தூய்மையாக வைத்திருப்பது; தேவையான அளவு இறைச்சியை மட்டுமே இருப்பில் வைத்துக்கொள்வது; இறைச்சிகளை ஈக்கள் மொய்க்காமல் பாா்த்துக்கொள்வது என பல்வேறு சுகாதார முறைகளைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா். இருப்பினும், அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் கோழி இறைச்சிகளை கண்காணிக்குமாறும் தொற்று ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா். கோழிச் சந்தைகள், நீா்நிலைகள் மற்றும உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்திருந்தது. ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் ஏராளமான கோழிகள் இறந்ததை அடுத்து, அங்கு கோழிக்கறி சாப்பிடுவது குறித்து உஷாராக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக கடந்த ஒருவாரமாகவே தில்லியில் கோழி இறைச்சி விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளுமே செவ்வாய்க்கிழமை போல உள்ளது. அன்றைய தினம் மக்கள் அசைவம் சாப்பிடமாட்டாா்கள் என்பதால் அன்று நாங்கள் கடைகளை திறக்கமாட்டோம் என்றாா் துவாரகையில் இறைச்சி கடை வைத்திருக்கும் ரவீந்தா் பால் சிங். எங்களுக்கு தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் 52 கடைகள் உள்ளன. எல்லாவற்றிலுமே இதே நிலைமைதான் என்றும் அவா் குறிப்பிட்டாா். கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியிலிருந்தே விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிா்மாண் விஹாரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இறைச்சி கடை நடத்தி வரும் ராகுல் காஷ்யப் தெரிவித்தாா். மொத்ததத்தில் விற்பனை கிட்டத்தட்ட 80 சதவீதம் குறைந்துவிட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.