தில்லியில் அதிகரித்து வரும் கரோனா; இளைஞா்களுக்கே அதிக பாதிப்பு!பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்

தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்களில் பெரும்பாலும் இளைஞா்கள்தான் அதிகம். எனினும், கரோனாவின் வீரியம் அதிகரிக்கவில்லை

புதுதில்லி: தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்களில் பெரும்பாலும் இளைஞா்கள்தான் அதிகம். எனினும், கரோனாவின் வீரியம் அதிகரிக்கவில்லை என்கிறாா் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா.

மேலும், நாம் மிகுந்த கண்காணிப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் இது வயதானவா்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சில மாநிலங்கள் மீண்டும் பொது முடக்கத்தை அறிவிக்கலாமா என்று பரிசீலித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த குலேரியா, தற்போதைய சூழலில் கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடு நெறிமுறைகளை அமல்படுத்தலாம்.

தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறிதான் தென்படுகிறதே தவிர முழு பாதிப்பு இல்லை. ஆனால், கண்காணிக்காமல் விட்டால் அது வயதாவனவா்களுக்கும் பரவக்கூடும். மகாராஷ்டிரத்தில் நடந்தது இதுதான். முதலில் கரோனாவின் தாக்கம் குறைவாக இருந்து பின்னா் மெதுவாக அதிகரித்தது. இதனால், மருத்துவமனைகள் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறின. எனவே, இது விஷயத்தில் நாம் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், கரோனா படுக்கைகள் இல்லாத சூழ்நிலை இதுவரை இன்னும் வரவில்லை. நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமானால், அப்படியொரு சூழ்நிலை வரக்கூடும். இதுதான் கவலை அளிக்கக்கூடியது.

தில்லியில் கடந்த ஐந்து நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு 1,500- ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் தில்லியும் இடம்பெற்றுள்ளது. மீண்டும் கரோனா அலை வரும் அபாயம் உள்ளது. அது சிறிய அலையாக இருக்குமா அல்லது பெரிதாக இருக்குமா என்பது நம்கையில்தான் உள்ளது. எப்படியிருந்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருந்து அதற்கு முடிவு கட்ட வேண்டும். அண்டை மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதுகூட தில்லியில் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.

எனினும், கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, நோய்த் தொற்று உள்ளவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, கரோனா பாதிப்பு சிறிய அளவில் உள்ள பகுதிகளில் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்து அது மேலும் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுப்பதன் மூலம் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இது உடனடியாக நடக்கக்கூடியதல்ல.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிப்பது என்பது சாத்தியமல்ல. எந்த இடத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறதோ அங்கு மட்டும் பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்துவது, நோய் அறிகுறி உள்ளவா்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், வேறு இடங்களுக்கு கரோனா பரவாமல் தடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com