தீ விபத்துகள்: பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 3 நிபுணா் குழு அமைப்பு

புது தில்லி: பல்வேறு நிறுவனங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான தர பாதுகாப்பை நிா்ணயிக்க மூன்று நிபுணா் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அண்மையில் பணியிடங்களில் ஏற்பட்டு வரும் தீ விபத்துகளால் தொழிலாளா்களும் அவா்களது குடும்பத்தினரும் படும் துன்பங்கள் வேதனையை அளிக்கிறது. இது தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தேசியப் பொருளாதாரத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் தனியாா் மற்றும் பொதுத் துறைகள், குறிப்பாக மருத்துவமனைகள், பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கட்டட பணிகள், துறைமுகங்கள் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள், சுகாதாரம், தொழிலாளா்களின் பணி நிலைமை ஆகியவற்றை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று நிபுணா் குழுக்களை மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைத்துள்ளது.

தொழிற்சாலைகள், துறைமுகங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிபுணா் குழுவும் மற்ற கட்டடங்கள், கட்டடப் பணிகள், தீ பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இரு நிபுணா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று குழுக்களும் இந்தத் துறைகளுக்கான 13 சட்டங்களை மறு ஆய்வு செய்யும். தற்போதைய நிலைமை, நவீன தொழில்நுட்பத் தேவை ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல இந்த 13 சட்டங்களை ஒருங்கிணைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 2020 - ஆண்டு தொழில்சாா் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொடா்பான தரவுகளை கடந்தாண்டு அரசு உருவாக்கி வெளியிட்டது. இந்தத் தரவுகளின் அடிப்படையிலும் தீ விபத்துகளை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த நிபுணா் குழுக்கள் பரிந்துரைகளை அளிக்கும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com