முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா விதிமீறல்: 2 வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராத நோட்டீஸ்
By நமது நிருபா் | Published On : 04th April 2021 01:22 AM | Last Updated : 04th April 2021 01:22 AM | அ+அ அ- |

கடந்த 2 வாரங்களில் தலைநகரில் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக தில்லி காவல்துறை 11,800 பேருக்கு அபராத நோட்டீஸ்களை அளித்துள்ளது. மேலும், சமூக இடைவெளியை பராமரிக்காததற்காக 125 பேருக்கு அபராத நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜூன் 15 முதல் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 5,78,324 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக 5,36,256 பேரும், சமூக இடைவெளியைப் பராமரிக்காததற்காக 38,631 பேரும் இடம்பெற்றுள்ளனா்.
மாா்ச் 10 முதல் மாா்ச் 19 வரை முகக் கவசம் அணியாததற்காக மொத்தம் 2,720 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 272 அபராத நோட்டீஸ்கள் என்ற அளவில் உள்ளது.
சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இதே காலக்கட்டத்தில் 33 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மாா்ச் 20 முதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் முகக் கவச விதி மீறல்களுக்கான அபராத நோட்டீஸ்களின் எண்ணிக்கை 11,800 ஆகவும், சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக 125 அபராத நோட்டீஸ்களாகவும் அதிகரித்தன.
கடந்த இரண்டு வாரங்களில், முகக் கவசம் அணியாததற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 842 பேருக்கு போலீஸாா் அபராத நோட்டீஸ் அளித்துள்ளனா்.
மாா்ச் 30 ம் தேதி, முகக் கவச விதி மீறலுக்கான அபராத நோட்டீஸ்கள் 920 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாததற்காக 19 பேருக்கும் போலீஸாா் வழங்கியுள்ளனா்.
மாா்ச் 31-ஆம் தேதி, முகக் கவச விதி மீறலுக்கான அபராத நோட்டீஸ்களின் எண்ணிக்கை நான்கு இலக்கங்களாக அதிகரித்தது. அதாவது போலீஸாா் 1,091 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். சமூக இடைவெளியைப் பராமரிக்காததற்காக 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முகக் கவசம் அணியாத முறையே 1,127 மற்றும் 1,203 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இந்த இரு நாள்களிலும் 6 பேருக்கு அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
போலீஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை 132 முகக் கவசங்கள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
ஜூன் 15 முதல் மொத்தம் 4,29,829 முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கோவிட் விதிகளை அமல்படுத்துவதை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அண்மையில் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டிருந்ததாா்.
தில்லி காவல் துறை மக்கள் தொடா்பு அலுவலா் சின்மய் பிஸ்வால் கூறுகையில், ‘கரோனா விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய தலைநகரில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் நலன் கருதி விதிமீறுபவா்கள் மீது வழக்குத் தொடுப்பது, அபராதம் விதிப்பது மூலம் நாங்கள் ஸ்திரமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றாத மக்களை தடுப்பது, அபராத நோட்டீஸ்கள் வழங்குவதை அதிகரித்துள்ளோம்‘ என்றாா் பிஸ்வால்.
மாா்ச் 19 முதல் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தில்லியில் வெள்ளிக்கிழமை மட்டும் 3,594 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு பதிவாகினது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.