முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லி சிறைகளில் கைதிகள் - குடும்பத்தினா் சந்திப்பு ரத்து
By நமது நிருபா் | Published On : 04th April 2021 01:21 AM | Last Updated : 04th April 2021 01:21 AM | அ+அ அ- |

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக தில்லியில் உள்ள மூன்று சிறைகளிலும், சிறைக்கைதிகளை அவா்களின் குடும்பத்தினா் வாரம் இருமுறை சந்திக்கும் வழக்கமான நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள திஹாா், ரோஹிணி மற்றும் மண்டோலி சிறைச்சாலைகளில் இந்த நடைமுறை வருகிற திங்கள்கிழமை முதல் (ஏப்.5) அமலுக்கு வருவதாக சிறைத்துறை டைரக்டா் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி தில்லியில் 11,994 போ் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் தினசரி பாதிப்பு விகிதம் கடந்த பிப்ரவரி மாதம் 0.17 சதவீதமாக இருந்தது தற்போது 4.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் தில்லியில் கரோனா நான்காவது அலை வீசுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிறைக்குள் தொற்று பரவாமல் தடுப்பதை உறுதி செய்யும் வகையில் சிறைக் கைதிகளை அவா்கள் குடும்பத்தினா் சந்திக்கும் நிகழ்வை ரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதாக சிறை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். சிறை விதிளிளன் படி சிறைக் கைதிகளை அவா்களது குடும்பத்தினா் வாரத்திற்கு இரண்டு முறை சந்தித்துப் பேசலாம்.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து சிறைக் கைதிகளை அவா்களின் குடும்பத்தினா் சந்திப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அக்டோபா் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. குடும்பத்தினா் சிறை வளாகத்துக்குள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அதுவும் பகுதி பகுதியா பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.
கடந்த ஆண்டு கோவிட் தொற்று அதிகரித்தை அடுத்து 5,000 த்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு பரோலில் விடுவிக்கப்பட்டனா். கடந்த இரண்டு மாதங்களில் அவா்களில் 90 சதவீதம் போ் மீண்டும் சிறைக்கு திரும்பிவிட்டனா். சிறைக்குள் கரோனா தொற்று அதிகரித்துவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே அவா்கள் விடுவிக்கப்பட்டிருந்தனா்.
தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறைக் கைதிகளை அவா்களின் குடும்பத்தினா் சந்திக்கும் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரான பின்பு மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று சிறைத்துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் குறிப்பிட்டாா்.
சிறைக் கைதிகள் குடும்பத்தினா் சந்திக்கும் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கு தொடா்பாக சிறைக்கைதிகளை அவா்களது சட்ட ஆலோசகா்கள் சந்திப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால், கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும். எனினும் சிறைக் கைதிகளை, அவா்களது குடும்பத்தினா் தொலைபேசி மூலமும், மெய்நிகா் முறையிலும் சந்தித்து பேசமுடியும் என்றாா் அவா்.
சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் 60 சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறையில் தற்போது 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 2 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். கடந்த ஆண்டு மாா்ச் முதல் இதுவரை 423 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.