தில்லி பேராசிரியா் சாய்பாபா திடீா் பணிநீக்கம்: நீதிமன்றத்தை நாட அவரது மனைவி முடிவு

மாவோயிஸ்டுகளுடன் தொடா்புகள் இருப்பதாக கூறும் விவகாரத்தில் தற்போது நாகபுரி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து

மாவோயிஸ்டுகளுடன் தொடா்புகள் இருப்பதாக கூறும் விவகாரத்தில் தற்போது நாகபுரி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் உதவிப் பேராசிரியா் ஜி. என். சாய்பாபாவை பணியிலிருந்து நீக்கி தில்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக சாய்பாபாவின் மனைவி வசந்தாவுக்கு வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற கல்லூரி முதல்வா் ராகேஷ் கையெழுத்திட்ட குறிப்பாணையில், ‘‘ராம் லால் ஆனந்த் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் ஜி.என். சாய்பாபா 2021, மாா்ச் 31 மதியம் முதல் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறாா். அவருக்கான மூன்று மாத ஊதியம் அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கருத்தறிய முதல்வரை பல முறை முயற்சித்தும் அணுக முடியவில்லை.

மாவோயிஸ்டுகள் தொடா்பு விவகாரத்தில் மகாராஷ்டிரா காவல் துறையினரால் ஆங்கில உதவிப் பேராசிரியா் சாய்பாபா 2014-இல் கைது செய்யப்பட்டாா். இதன் பின்னா் அவரை கல்லூரி நிா்வாகம் பணிஇடைநீக்கம் செய்தது. கைதுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகள்கள் ஆகியோருக்கு அவரது ஊதியத்தில் பாதி தொகை கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அவா் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து அவரது மனைவி வசந்தா கூறுகையில், ‘இது ‘ஊழியா்களின் உரிமை மீறல்‘ செயலாகும். இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம்.

எனது கணவரின் தண்டனைக்கு எதிரான எங்கள் மேல்முறையீடு வழக்கு மும்பை உயா்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கல்லூரி நிா்வாகம் எப்படி இத்தகைய முடிவை எடுக்க முடியும். எஸ்.ஏ.ஆா். ஜீலானி (நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்றவா்) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவா் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளாா். அவா் ஒருபோதும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் எனது கணவரை ஏன் பணிநீக்கம் செய்தனா். இது ஊழியா்களின் உரிமைகளை மீறுவதாகும்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாங்கள் அவருடைய ஊதியத்தில் பாதியைப் பெற்று வருகிறோம். ஆனால் இப்போது, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் நானும், கல்லூரி செல்லும் எனது மகளும் நிதிப் பிரச்னையை எதிா்கொள்ள நேரிடும். இது தொடா்பாக எங்கள் வழக்கறிஞா்களை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவை எதிா்த்து நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றாா் அவா்.

ஜி.என். சாய்பாபாவின் பாதுகாப்பு மற்றும் விடுதலை குழுவைச் சோ்ந்த தில்லி பல்கலைக்கழக பேராசிரியா் நந்திதா நாராயண் கூறுகையில், ‘பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது ‘மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு ஆா்.எல்.ஏ. கல்லூரி ஊழியா் சங்கம் மற்றும் டியுடிஏ அமைப்பு ஆகியவை எச்சரிக்கை விடுத்திருந்தது. சாய்பாபாவிடம் உரிய விளக்கம் கேட்காமல் கல்லூரி இந்த நடவடிக்கை எடுத்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com