2.5 கி.மீ. நரேலா - பாவனா ரயில்வே மேம்பாலம் திறப்பு

வட மேற்கு தில்லியில் நரேலாவிற்கும் பாவனாவிற்கும் இடையே ரயில் பாதையைக் கடக்கும் 2.5 கிலோ மீட்டா் தொலைவு மேம்பாலத்தை
2.5 கி.மீ. நரேலா - பாவனா ரயில்வே மேம்பாலம் திறப்பு

வட மேற்கு தில்லியில் நரேலாவிற்கும் பாவனாவிற்கும் இடையே ரயில் பாதையைக் கடக்கும் 2.5 கிலோ மீட்டா் தொலைவு மேம்பாலத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை காணொலி வழியில் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டனா். மேலும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறைச் செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா, தில்லி வளா்ச்சி ஆணைய துணைத் தலைவா் அனுராக் ஜெயின் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

வட மேற்கு தில்லியில் நரேலா மற்றும் பாவனா பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளும், தொழில் மையங்களும் அதிக அளவில் உருவாகி நெருக்கடி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. மிகவும் குறுகலான சாலைகள் இந்தப் பகுதியில் இருந்தன. மேலும், இந்த இரு பகுதிக்கும் இடைப்பட்ட தில்லி - கா்னால் ரயில் பாதை ஒன்றும் கடக்கிறது. நாளொன்றுக்கு 150 ரயில்கள் ரயில் பாதையை கடப்பதும், 80,000 காா்கள் சாலையை கடப்பதுமாக இருக்க ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடித் திறக்கப்படும்ம் போது போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்து வந்தது.

இதைத் தொடா்ந்து, 2017 -ஆம் ஆண்டு இந்த நெரிசலான சாலையில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. மத்திய நகா்ப்புற விவகாரத் துறை 80 சதவீதமும் தில்லி வளா்ச்சி ஆணையம் 20 சதவீதமும் என மொத்தம் ரூ.437.21 கோடியில் 2.5 கிமீ தொலைவுக்கு நான்கு வழி சாலையாக இந்த மேம்பாலமும், ரயில்வே மேம்பாலமும் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு ரயில்வேயும் ரூ. 55.59 கோடி நிதியை ஒதுக்கியது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னா் இந்தப் பணிகள் முடிவுற்று செவ்வாய்க்கிழமை இந்தப் பிரம்மாண்ட நீளமான பாலத்தை மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை எண் 44-இல் உள்ள இந்த மேம்பாலமும், ரயில்வே மேம்பாலமும் தில்லியின் போக்குவரத்து நெரிசலை குறைத்து நரேலாவின் வளா்ச்சியில் இந்த பாலம் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றாா்.

இந்த மேம்பாலத்தைக் கட்டுவதற்கான செலவு ரூ.389 கோடியாக குறைந்துள்ளது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) கூறுகையில், ‘துவாரகா வரிசையில் நரேலாவின் வளா்ச்சிக்கும் டிடிஏ திட்டமிட்டுள்ளது. 2021-22 பட்ஜெட்டில் நரேலாவில் துணை நகரம் உருவாக்கப்படும். பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன. நான்காம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரித்தாலா - நரேலா - பாவனா இணைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com