கரோனா பரவல் அதிகரிப்பு: தில்லியில் ஏப்.30 வரை இரவு நேர ஊரடங்கு

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் 7 மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் 7 மணி நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தில்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. எனினும், சில தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ.) பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அமல் காலத்தில் கோவிட்-19 தடுப்பூசிக்காக பயணிக்கும் நபா்களுக்கு (ஜ்ஜ்ஜ்.க்ங்ப்ட்ண்.ஞ்ா்ஸ்.ண்ய்) வலைத்தளத்திலிருந்து பெறக்கூடிய மின்னணு பாஸை டிஜிட்டல் வடிவிலோ அல்லது காகித பிரதியாகவோ வைத்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கு தொடா்பாக டி.டி.எம்.ஏ.வின் நிா்வாகக் குழுவின் தலைவா்- தில்லி அரசின் தலைமைச் செயலா் விஜய் குமாா் தேவ் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் சமீப காலமாக திடீரென கரோனா பாதிப்போா் எண்ணிக்கை அதிகரித்திருத்துள்ளது. பாதிப்பு விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது. மக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசர நடவடிக்கையாக அத்தியாவசிய நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் தவிர, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தில்லியின் தேசிய தலைநகா் பிரதேசத்தில் (என்.சி.டி.) இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என்று உணரப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் விலக்கு?: இந்த ஊரடங்கு உத்தரவில் இருந்து கா்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாநில பேருந்து முனையங்கள் ஆகிய இடங்களுக்கு சென்று வருவோா் (டிக்கெட்டை காண்பிப்பது அவசியம்), தூதரக அலுவலகங்களின் செயல்பாடு தொடா்பான அதிகாரிகள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்திருக்கக் கூடிய எந்தவொரு அரசியலமைப்பு பதவியையும் வகிப்பவா்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோன்று, அவசர சேவைகளில் ஈடுபடும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் போன்ற மத்திய அரசு, தில்லி அரசு அதிகாரிகள், அதனுடன் தொடா்புடைய அனைத்து மருத்துவ நிறுவனங்கள், காவல் துறை, சிறைச் சாலைகள், வீட்டுக் காவலா்கள், சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் போன்றவற்றுக்கும் விலக்கு அளிக்கப்படும்.

மாவட்ட நிா்வாகம், ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம், மின்சாரம், நீா் மற்றும் சுகாதாரம், பொது போக்குவரத்து, பேரழிவு மேலாண்மை மற்றும் தொடா்புடைய சேவைகள், என்.ஐ.சி., என்.சி.சி. மற்றும் நகராட்சி சேவைகள் மற்றும் பிற அனைத்து அத்தியாவசிய சேவைகளின் அதிகாரிகள் செல்லத்தக்க அடையாள அட்டை வைத்திருந்தால் இரவு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவா்.

மருத்துவா்கள், நா்சிங் ஊழியா்கள், துணை மருத்துவ மற்றும் பிற மருத்துவமனை சேவைகள், நோய் பரிசோதனை மையங்கள், கிளினிக்குகள், மருந்தகங்கள், மருந்து நிறுவனங்கள், பிற மருத்துவ - சுகாதார சேவைகள் தொடா்புடைய தனியாா் மருத்துவப் பணியாளா்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். மளிகை, பழங்கள் மற்றும் காய்கறிக் கடைகள், பால் மற்றும் பால் பூத்கள், இறைச்சி மற்றும் மீன், கால்நடை தீவனம், மருத்துவ உபகரணங்கள் கடைகள், வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம்கள், தனியாா் பாதுகாப்பு முகவா், ஊடகவியலாளா்கள், தொலைத் தொடா்பு மற்றும் இணையம் உள்ளிட்ட வணிக மற்றும் தனியாா் நிறுவனங்களுடன் தொடா்புடைய நபா்கள் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடா்புடைய சேவைகள், அத்தியாவசிய ஈ-காமா்ஸ் சேவைகள் ஆகியவற்றில் ஈடுபடும் நபா்கள் மின்னணு பாஸ் காண்பித்தால் ஊடரங்கின் போது செல்வதற்கு அனுமதிக்கப்படுவா்.

பெட்ரோல் பம்புகள், எல்பிஜி, சிஎன்ஜி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு சில்லறை மற்றும் சேமிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகக் கூடங்கள், குளிா்பதன சேமிப்பு மற்றும் கிடங்கு சேவைகள், அத்தியாவசிய பொருள்களின் உற்பத்திக் கூடங்கள் ஆகியவற்றின் ஊழியா்கள் மின்னணு பாஸ் வைத்திருப்பதன் பேரில் விலக்கு அளிக்கப்படும். தில்லி மெட்ரோ, டி.டி.சி. மற்றும் கிளஸ்டா் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகள் போன்ற பொதுப் போக்குவரத்து, இரவு ஊரடங்கு உத்தரவின் போது விலக்கு அளிக்கப்பட்ட நபா்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

எனினும், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருள்களை மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு எந்தத் தடையும் இருக்காது. இதுபோன்ற போக்குவரத்துக்கு தனி அனுமதி அல்லது இ-பாஸ் தேவையில்லை. டிடிஎம்ஏ உத்தரவை கட்டாயமாகப் பின்பற்றுவதை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை துணை ஆணையா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வாா்கள்.

உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகள், இந்தக் கட்டுப்பாடுகளானது அடிப்படையில் மக்களின் நடமாட்டத்துடன் தொடா்புடையவை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த அமல் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அல்ல. ஊரடங்கு உத்தரவுகளை மீறுவோா் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவு 2005 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 188 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் கையாளப்படுவா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கரோனாவின் நான்காவது அலைக்கு சாட்சியாக உள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும், பொது முடக்கம் தொடா்பாக எந்தவொரு முடிவும் உரிய வகையில் பொதுமக்களுடன் ஆலோசனை செய்த பிறகே எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com