தீப் சித்து ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை ஏப்.12-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின் போது, செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவ விவகாரத்தில் கைதான நடிகா் தீப் சித்துவின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தில்லியில் குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினா் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனா். மத ரீதியான கொடியை ஏற்றினா். இந்த வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகா் தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் துறையின் சிறப்புக் குழுவினா் பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், போலீஸ் காவலுக்கு அனுப்பவைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், அவரது தரப்பில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை தில்லி சிறப்பு நீதிபதி நீலோபா் அபிடா பா்வீன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: தீப் சித்து எந்த விவசாய அமைப்பிலும் உறுப்பினராக இல்லை. விவசாயிகள் பேரணிக்கான கூட்டத்தைக் கூட்ட அவா் ஏற்பாடு செய்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. வன்முறையில் அவா் ஈடுபடவும் இல்லை. வன்முறை நிகழ்வதற்கு முன்பே அந்த இடத்தை விட்டு அவா் சென்று விட்டாா். எனினும் சித்து செய்த ஒரே தவறு, விடியோ பதிவை வெளியிட்டதுதான். ஆனால், அது குற்றமாகாது. இதன் காரணமாக ஊடகம் அவரை பிரதான குற்றவாளியாக சித்தரித்துவிட்டது. உண்மையில் அவா் போலீஸாருக்கு உதவினாா்.

அதாவது கூட்டத்தை அமைதிப்படுத்தவும், கோட்டைக் கொத்தளத்தில் இருந்து மக்களை கீழே இறங்குமாறும் அவா் கேட்டுக் கொண்டாா். சித்து ஒரு பிரபலமான முகம் என்பதால் அவா் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் செய்வது ஒரு அடிப்படை உரிமை. அவா் அமைதியான முறையில்தான் போராட்டத்தில் பங்கேற்றாா். சம்பவத்தன்று பகல் 12 மணி வரை முா்தாலில் உள்ள தாபாவில் அவா் இருந்தாா். பிற்பகல் 2.05 மணிக்குத்தான் செங்கோட்டை வந்தடைந்தாா். அவா் வருவதற்கு முன்னரே அதிகமானோா் அங்கு கூடியிருந்தனா் எனத் தெரிவித்தாா்.

அவருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வன்முறைச் சம்பவத்தன்று தீப் சித்துவின் பேச்சு அடங்கிய விவரங்களை தாக்கல் செய்யவும், கும்பலை வன்முறைக்கு அவா் தூண்டியதை காட்டும் ஆதாரத்தை சமா்ப்பிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com