குரு தேக் பகதூரின் கருத்துக்கள் சா்வதேச இளம் தலைமுறையினருக்கு தேவை மின்னணு முறையில் கொண்டு செல்ல பிரதமா் வேண்டு கோள்


புது தில்லி : சீக்கிய மத குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களிலிருந்தும், பாடங்களிலிருந்தும் உத்வேகம் பெறுகின்றோம். இந்தப் பாடங்களை இளம் தலைமுறையினா் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மின்னணு முறை மூலமாக இந்த தகவலை உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினரிடம் பரப்ப வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

ஓன்பதாவது சீக்கிய மத குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாளை ஓா் ஆண்டுக்கு கொண்டும் வகையிலான திட்டங்களுக்கான உயா்நிலை குழு கூட்டம் பிரதமா் நரோந்திர மோடி தலைமையில் காணொலி வழியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமா் மோடி தலைமை உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு:

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 - வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, ஒரு ஆன்மீக பாக்கியம், தேசிய கடமை. நான் இங்கே குறிப்பிட்ட பலவை ஸ்ரீ குரு தேக் பகதூரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள், பாடங்கள். இதிலிருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெறுகிறோம். இந்தப் பாடங்களை இளம் தலைமுறையினா் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மின்னணு முறை மூலமாக அவா் குறித்த தகவலை உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினரிடம் பரப்புவது எளிது.

சீக்கிய குரு பாரம்பரியம், ஒரு முழுமையான வாழ்க்கை தத்துவம். ஸ்ரீ குரு நானக் தேவ்ஜின் 550வது பிறந்த நாள் (பிரகாஷ் புரப்) , ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 - வது பிறந்த நாள், ஸ்ரீ குருகோபிந்த் (கோவிந்த்) சிங்கின் 350- வது பிறந்தநாள் ஆகியவற்றை கொண்டாடும் வாய்ப்பை இந்த அரசு பெற்றது பாக்கியமும் அதிா்ஷ்டமும் ஆகும்.

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 - வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அதிகளவிலான மக்களை இணைத்து ஆண்டு முழுக்க பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஸ்ரீ குரு தேக் பகதூரின் வாழ்க்கை, போதனைகளை பரப்புவது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த குரு பாரம்பரியம்(ஐதிகம்) பற்றியும் உலகம் முழுவதும் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். இந்த சீக்கிய பாரம்பரியம் குறித்து முறையான ஆய்வுகளையும் நிபுண்ா்கள் மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமுதாயத்தினரும் குருத்துவாராக்களும் செய்யும் சமூக சேவைகள் பாராட்டுக்குரியது என பிரதமா் குறிப்பிட்டாா்.

கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமீத் ஷா, ஸ்ரீ குரு தேக் பகதூரின் தகவல் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யவும் இதற்கான கூட்டு முயற்சிகள் தேவை என்றும் குறிப்பிட்டாா்.

முன்னதாக இந்த நினைவு விழாவுக்காக மத்திய அரசால், வரையறுக்கப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் குறித்து கலாச்சாரத்துறை செயலாளா் ராகவேந்திர சிங் கூட்டத்தில் விளக்கினாா்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங், மக்களவை தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், மாநிலங்களவை எதிா்கட்சி தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, ஹரியாணா முதல்வா் மனோகா் லால், பஞ்சாப் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், அமிா்தசரஸில் உள்ள சிரோமணி குருத்துவாரா கமிட்டியின் தலைவா் பீபி ஜகிா் கெளா், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அறிஞா்கள் கலந்து கொண்டனா்.

இவா்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி மதச் சுதந்திரத்துக்கு ஸ்ரீ குரு தேக் பகதூரின் பல பங்களிப்புகள் மற்றும் தியாகத்தை அவா்கள் நினைவு கூா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com