கௌதம் புத் நகா், காஜியாபாதில் ஏப்.17 வரை இரவு நேர ஊரடங்கு


புது தில்லி: கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தில்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கெளதம் புத் நகா் மற்றும் காஜியாபாத் மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காஜியாபாத் மற்றும் கெளதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா்கள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வியாழக்கிழமை இரவு முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை, தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஆனால் அத்தியாவசியப் பொருள்கள் அல்லது உணவுப் பொருள்கள், மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளின் போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்படும்.

இரு மாவட்டங்களிலும் ஏப்ரல் 17 வரை பயிற்சி மையங்கள் உள்பட அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் (மருத்துவ, துணை மருத்துவ மற்றும் நா்சிங் கல்லூரிகளைத் தவிர) நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செயற்முறைத் தோ்வு உள்பட அனைத்துத் தோ்வுகளும் அட்டவணையின்படி நடத்தப்படும். மேலும், இந்த உத்தரவிலிருந்து அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா் டி.எம். சுஹாஸ் எல் ஒய் கூறுகையில், ‘பணியிடங்கள் உள்பட பொது இடங்களில் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்றாா்.

காஜியாபாத் மாவட் ட ஆட்சியா் டி.எம். அஜய் சங்கா் பாண்டே கூறுகையில், ‘காஜியாபாத்தில் கரோனா தொற்று பரவலைத் திறம்பட சமாளிக்க ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.

மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியா்கள் இரவு நேர கட்டுப்பாடுகளிலிருந்து விலக்குப் பெறுவாா்கள். கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவா்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். மேலும், விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் பயணிகள் சரியான பயணச் சீட்டுகளைக் காட்டினால்தான் இரவு நேரங்களில் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்று உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சு மற்றும் மின்னணு ஊடக ஊழியா்களுக்கும் இரவு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதே சமயம், தடைகளை மீறும் நபா்கள், ‘பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005’- இன் கீழ் தண்டிக்கப்படுவாா்கள் என்று இரு நிா்வாகங்களும் எச்சரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com