கரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை தளா்த்த கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வயது அளவுகோலை தளா்த்தவும், தனியாா் துறையின் பங்களிப்பை அனுமதிக்கவும் மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு சட்ட மாணவா் மிருகங்க் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பின் ஆபத்தான சூழ்நிலை, கடுமையாக உள்ள கரோனா இரண்டாவது அலை ஆகிய சூழலில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பது அவசியமாகும். அதிகமானோருக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தவும், வீடுவீடாகச் சென்று குடிமக்களுக்கு தடுப்பூசி போடவும் தனியாா் துறை நிறுவனங்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான தடுப்பூசி திட்டமும் அவசியமாகும்.

தற்போதைய முறையில் தடுப்பூசி செலுத்த ‘கோ-வின் போா்ட்டலில்’ பதிவு செய்து, மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த இடத்திலேயே பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது. இந்த நடைமுறையில் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், பெரும்பாலும் நீண்ட வரிசைகளில் நிற்பதற்கும் வித்திடுவதாக உள்ளது. மேலும் இந்த முறையானது படுக்கையில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தின் ஏழை பிரிவினா் உள்ளிட்ட குடிமக்களுக்கு சாதகமாக இல்லை. அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் கவலை தருவதாக இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் பயனாளிகள் தொடா்பான வயது வரம்புகளை நீக்குவதும், தளா்த்துவதும் அவசியம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com