கரோனா 2-ஆவது அலையை அரசு கட்டுப்படுத்த கோரிய மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: கரோனா நோய்த் தொற்றின் மற்றொரு அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘கரோனா தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது. முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பேணுவதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. மக்கள் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியையும் பெற்று வருகின்றனா். இந்த நிலையில், மனுவில் கோரப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான கோரிக்கையாகவே உள்ளன. அரசு வேறு என்ன செய்ய வேண்டும் என மனுதாரா் விரும்புகிறாா்?. இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை. எனினும், மனுதாரா் ஒரு குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் பொருத்தமான கோரிக்கைகளுடன் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்ய சுதந்திரம் அளிக்கப்படுகிறது’ என தெரிவித்தனா்.

இது தொடா்பாக மனுதாரரும், வழக்குரைஞருமான ராகேஷ் மல்ஹோத்ரா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: கரோனாவின் மற்றொரு அலை அல்லது அதன் புதிய நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மாா்ச் 15 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. தங்கள் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சிறைக் கைதிகள் அழைத்து வரப்படுகின்றனா்.

அவா்கள் தங்களது உறவினா்களை நீதிமன்ற வளாகத்தில் சந்திக்கின்றனா்.

இதனால், சிறைக்கு உள்ளே அல்லது வெளியே கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், காணொலி வாயிலாக அவா்களை விசாரணைக்கு ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும். இது தவிர, உள்ளூா் சந்தைகள் மற்றும் மால்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் போன்ற வணிக வளாகங்களில் அதிகக் கூட்டம் கூடுகிறது. பாா்வையாளா்கள் பலரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. முகக் கவசமும் அணிவதில்லை. இதனால், கவனக் குறைவு தவிா்க்கப்படக்கூடிய வகையில் உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com