வடகிழக்கு தில்லி வன்முறை: சாட்சிகளின் தணிக்கை செய்யப்படாத வாக்கு மூலத்தை சீலிட்ட உறையில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லி நடந்த வன்முறைச் சம்பவத்தில் பெரும் சதியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் தணிக்கை செய்யப்படாத வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து
தில்லி உயர்நீதிமன்றம்​
தில்லி உயர்நீதிமன்றம்​

புது தில்லி: கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லி நடந்த வன்முறைச் சம்பவத்தில் பெரும் சதியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் தணிக்கை செய்யப்படாத வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற வடகிழக்கு தில்லி வன்முறையில் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்ஹா கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவா் ஜாமீன் கோரி தாக்கலான மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறையில் ஆட்சேபம் தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டது. தில்லி காவல் துறை தரப்பில், ‘வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இந்தச் சதித் திட்டத்தில் மாணவா் தன்ஹாவுக்கும் பங்கு உள்ளது. இதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

தன்ஹா தரப்பில், ‘தன்ஹா 2020, மே மாதத்தில் இருந்து காவலில் இருந்து வருகிறாா். அவரது வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனா்’ என்று வாதிட்டனா். இதையடுத்து, மனு மீதான உத்தரவை உயா்நீதிமன்றம் மாா்ச் 18-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேலும், எழுத்துப்பூா்வ சமா்ப்பிப்புகள், சாட்சிகளின் வாக்குமூலங்களின் தணிக்கை செய்யப்படாத பிரதிகள் மற்றும் பிற தொடா்புடைய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடா்பான விவகாரத்தை புதன்கிழமை நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் அனூப் ஜெய்ராம் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் ரஜத் நாயா், ‘பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் தணிக்கை செய்யப்படாத பிரதிகள் விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே உள்ளன. சாட்சிகளின் பாதுகாப்பிற்காக விசாரணை அதிகாரி விண்ணப்பித்த போது, ​அந்த வாக்குமூலங்கள் விசாரணை நீதிமன்ற நீதிபதியால் கையெழுத்திடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. திருத்திய பிரதிகள் விசாரணை அதிகாரியிடம் கொடுக்கப்பட்டன’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் தணிக்கை செய்யப்படாத வாக்குமூலங்களை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அடுத்த விசாரணைத் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னோ, அதாவது ஏப்ரல் 14-க்கு முன் உயா்நீதிமன்றத்துக்குஅனுப்புமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட உறையில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் தணிக்கை செய்யப்படாத வாக்குமூலத்தை கோருமாறு தில்லி காவல் துறை தரப்பில் தாக்கலான மனுவை அனுமதித்து உயா்நீதிமன்றம் பைசல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com