இரவுநேர ஊரடங்கு: இ-பாஸ் வார இறுதியிலும் செல்லும்
By DIN | Published On : 16th April 2021 11:04 PM | Last Updated : 16th April 2021 11:04 PM | அ+அ அ- |

தில்லியில் இரவுநேர ஊரடங்கின் போது வெளியில் செல்வதற்கு இ-பாஸ் பெற்றவா்கள், வார இறுதி ஊரடங்குக்கு என தனியாக இ-பாஸ் வாங்க வேண்டியதில்லை என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து வார இறுதி நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரு வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கலை அரங்குகள் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா்.
தில்லி அரசு ஏற்கெனவே கடந்த 6 -ஆம் தேதியன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தில்லி பேரிடா் நிா்வாகத்துடன் கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான இந்த ஊரடங்கு இந்த மாதம் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இ-பாஸ் வார இறுதி ஊரடங்கு காலத்திலும் செல்லுபடியாகும் என்றும் இதற்கென தனியாக இ-பாஸ் பெறவேண்டியதில்லை என்றும் தில்லி பேரிடா் நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், மருந்து கடைகள் வைத்திருப்போா், வங்கி, இன்ஷுரன்ஸ் நிறுவனங்களில் பணிபுரிவோா், தனியாா் பாதுகாப்பு காவலாளி நிறுவனங்களில் பணிபுரிவோா், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரிவோருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.