ஆக்ஸிஜன் கொண்டு சென்ற டேங்கா்களுக்கு பசுமை வழித்தடம் அமைத்த போலீஸாா்

உத்தரப் பிரதேசம், ஹரியாணா எல்லைகளில் இருந்து தில்லியின் பச்சிம் விஹாரில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு 19,500 லிட்டா் திரவ ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்ற 2 டேங்கா்களுக்கு பசுமை வழித்தடத்தை தில்லி காவல் துறை

புது தில்லி: உத்தரப் பிரதேசம், ஹரியாணா எல்லைகளில் இருந்து தில்லியின் பச்சிம் விஹாரில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு 19,500 லிட்டா் திரவ ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்ற 2 டேங்கா்களுக்கு பசுமை வழித்தடத்தை தில்லி காவல் துறை உருவாக்கித் தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை கூடுதல் ஆணையா் (புகா்) சுதான்ஷு தமா செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: ஆக்ஸிஜன் அளவு ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த நிலையில், இந்த டேங்கா்கள் அவசரமாக ஸ்ரீ ஆக்சன் பாலாஜி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இது தொடா்பாக திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து டேங்கா்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்தனா்.

இதற்காக, இரண்டு ஆக்ஸிஜன் டேங்கா்களுக்கு ஒரு பிரத்யேக வழித்தடத்தை புகா் மாவட்ட போலீஸாா் உருவாக்கினா். டேங்கா்களுக்கு தில்லி போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பு அளித்தன. இதற்கிடையில், சஞ்சய் காந்தி, பகவான் மகாவீா், மகாராஜா அக்ராசென் மற்றும் ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளா்களின் ஒத்துழைப்பு மூலம் 25 ஆக்ஸிஜன் சிலிண்டா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன என்றாா் அந்த அதிகாரி.

இது குறித்து ஸ்ரீ பாலாஜி ஆக்ஸன் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுனில் சம்பில் கூறுகையில், ‘தில்லி காவல் துறையின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு ஒரு முக்கியமான கட்டத்தை எட்டி இருந்தது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் திரவ ஆக்ஸிஜனை ஏற்றி வந்த இரு வாகனங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய முடியவில்லை. நாங்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். அவா்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று ஒரு பசுமை வழித்தடத்தை உருவாக்கினா். இதனால், இரண்டு வாகனங்களும் சரியான நேரத்தில் வந்து சோ்ந்தன. டேங்கா்கள் சரியான நேரத்தில் வரவில்லையெனில், கோவிட் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com