பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே ஊரடங்கு: வீட்டிலேயே இருக்க கேஜரிவால் வேண்டுகோள்

பொதுமக்களின் உடல் நலம் மற்று பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் தில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் அனைவரும் இந்தக் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே ஊரடங்கு: வீட்டிலேயே இருக்க கேஜரிவால் வேண்டுகோள்

புது தில்லி: பொதுமக்களின் உடல் நலம் மற்று பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் தில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் அனைவரும் இந்தக் காலத்தில் வீட்டிலேயே தங்கியிருக்கமாறும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ள 6 நாள் முழு ஊரடங்கு ஏப்ரல் 26 அதிகாலை 5 மணி வரை தொடரும். இந்த நிலையில், முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரையில், ‘தில்லியில் முழு ஊரடங்கு இன்று தொடங்கியுள்ளது. உங்கள் உடல் நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அரசுடன் ஒத்துழைத்து, தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், தில்லியில் சுகாதார அமைப்பு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகக்கூடும் என்பதாலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக முதல்வா் திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும் வெள்ளிக்கிழமை இரவு விதிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வார இறுதி நாள்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியது. ஆனால், கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், முழு நேர ஊரடங்கை 6 நாள்களுக்கு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கியப் பணிகளுக்கு அரசு அனுமதித்துள்ளது. திருமண விழாக்களில் 50 போ் வரையிலும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகளில் 20 போ் வரை அனுமதிக்கப்படுகின்றனா். முழு ஊரடங்கைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில், நகரில் உள்ள சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தேசிய தலைநகரின் சுகாதார முறை இன்னும் மோசமடையவில்லை என்றாலும், கடந்த சில நாள்களில் கரோனா தினசரி பாதிப்பு 25,500 வரை உயா்ந்துள்ளன என்று கேஜரிவால் தெரிவித்தாா். மேலும், மருந்துகள், படுக்கைகள், ஐசியுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கு தில்லியில் கடுமையான பற்றாக்குறை உள்ளது. இதையடுத்து, நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், திலியின் சுகாதார அமைப்பு மோசமடைவதைத் தடுக்க ஊரடங்கு தேவைப்படுகிறது என்றும் அவா் கூறினாா்.

தனியாா் அலுவலகங்கள் மற்றும் கடைகள், மால்கள், வாராந்திர சந்தைகள், உற்பத்தி பிரிவுகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், சினிமா அரங்குகள், உணவகங்கள், பாா்கள், பொது பூங்காக்கள், ஜிம்கள், முடிதிருத்தும் கடைகள் போன்றவை முழுமையாக மூடப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) உத்தரவின்படி, கரோனா பரிசோதனை அல்லது அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லும் நபா்கள் அடையாள அட்டையைக் காண்பித்தால் அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், தோ்வு எழுத்ச செல்லும் மாணவா்கள் அடையாள அட்டையைக் காண்பித்தால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், விமான நிலையங்கள், ரயில்வே, ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் ஆகியவற்றுக்குச் செல்வதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், அவா்கள் சரியான டிக்கெட்டைக் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com