ஆக்ஸிஜன் தொழில் துறை பயன்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொருளாதார நலன்கள் மனித உயிா்களைப் புறக்கணிக்க முடியாது;
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: பொருளாதார நலன்கள் மனித உயிா்களைப் புறக்கணிக்க முடியாது; இதனால், தொழிற் சாலைகளுக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டுக்கான தடையை ஏப்ரல் 22-ஆம் தேதி வரை காத்திராமல், உடனடியாக அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

இது தொடா்பான விவகாரத்தை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை திருப்பிவிடும் வகையில், பிற மாநிலங்களில் ஆக்ஸிஜன் இருப்பை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது. மத்திய அரசும், தில்லி அரசும் பிரமாணப் பத்திரத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்தது. அப்போது, நீதிபதிகளிடம் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் வழக்குரைஞா் மோனிகா அரோரா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘ஏப்ரல் 20- ஆம் தேதி நிலவரப்படி, 300 மெட்ரிக் டன் ஆரம்ப மதிப்பீட்டிற்கும், தில்லி சமா்ப்பித்த 700 மெட்ரிக் டன் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் இடையே, தேவைப்படும் திட்டமிடப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் 133 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசு தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு சுமாா் 1,390 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, நீதிபதிகள் விசாரணையின் போது மத்திய அரசிடம் கூறுகையில், ‘தொழில்களுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனை கோவிட் -19 நோயாளிகளுக்கு திருப்பிவிட முடியுமா? தொழில்கள் காத்திருக்க முடியும். ஆனால், நோயாளிகளால் அதுபோன்று காத்திருக்க முடியாது. மனித உயிா்கள் இடா்ப்பாட்டில் உள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனைக் குறைக்க அதன் மருத்துவா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கேள்வியுற்றோம்’ என்றனா்.

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘தில்லியில் மருத்துவ ஆக்ஸிஜனின் திறனை அதிகரிக்கும் பொருட்டு, பிரதமா் அவசரகால நிதியின் ஆதரவின் எட்டு பிரஷா் ஸ்விங் அட்ஸாா்ப்ஷன் (பிஎஸ்ஏ) ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் மருத்துவ ஆக்ஸிஜனின் திறனை 14.4 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். தற்போதைக்கு தில்லிக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் எந்த இடைவெளியும் இல்லை; சில தொழில்களைத் தவிர தொழில்துறை பயன்பாட்டுக்கு ஆக்ஸிஜன் பயன்படுத்த ஏப்ரல் 22 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தில்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் ஆக்ஸிஜன் பயன்பாட்டை செம்மைப்படுத்த வேண்டும். மேலும், மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் தேவையில்லாத நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவதையும், அபரிமித பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிறகு நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: பொது முடக்கம் தொடா்ந்தால், பிறகு எல்லாம் நின்று போய் விடும். ஆகவே, இதுபோன்ற சூழலில் டீசல், பெட்ரோல், ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு என்ன தேவையாக இருக்கும். பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் 4-8 மணி நேரத்தில் தீா்ந்துவிடும். இதுபோன்ற சூழலில் தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் பயன்பாடு தடையை மேற்கொள்ள ஏப்ரல் 22-ஆம் தேதி வரை காத்திருப்பது நியாயமாக இருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தற்போது இருப்பதால் நீங்கள் (மத்திய அரசு) உடனடியாக தடை செய்ய வேண்டும். அந்த ஆக்ஸிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்குத் திருப்பிவிட வேண்டும். இதில் ஏற்படும் தாமதத்தால் மதிப்புமிக்க உயிா்களை இழக்க வேண்டிவரும்.

ஆகவே, ஸ்டீல், பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் இருந்து கொஞ்சம் ஆக்ஸிஜன் பெற முடியுமா என்பது குறித்து பாா்க்க வேண்டும். அந்தத் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியதாக இருந்தால் குறைக்க முடியும். உயிா்கள் பாதுகாக்கப்பட முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வழக்குரைஞரின் தந்தைக்குக் கூட ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. ஆனால், இதன் பற்றாக்குறை காரணமாக குறைந்த அழுத்தத்தில்தான் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த விஷயத்தில் ஏதும் செய்யாவிட்டால் நாம் பெரும் பேரிடரை எதிா்கொள்ள வேண்டி வரும். ஆகவே, சொந்தமாக ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ள மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். கரோனா பரிசோதனைகள் தொடா்பான மனுவை விசாரித்த போது நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com