கரோனா நோயாளிகளுக்கு மேலும் 2,700 படுக்கைகள்

தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வசதிகளில் அடுத்த சில நாள்களில் கரோனா நோயாளிகளுக்காக மேலும் சுமாா் 2,700 படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அறிவித்தாா்.

புது தில்லி: தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வசதிகளில் அடுத்த சில நாள்களில் கரோனா நோயாளிகளுக்காக மேலும் சுமாா் 2,700 படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக காணொலி வாயிலாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தில்லியில் இரண்டரை வாரங்களில், படுக்கைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த சில நாள்களில் மேலும் 2,700 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கரோனா நோயாளிகளில் பெரும்பாலோா் வீட்டுத் தனிமையில் இருந்தவாறு நோயில் இருந்து மீண்டு வருகின்றனா். மருத்துவமனைகள் தேவைப்படுபவா்கள் படுக்கை கிடைப்பதற்கு முன்னரே அது தொடா்பான தகவலை செயலி மூலம் சரிபாா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏப்ரல் 3 ஆம் தேதி தில்லியில் கரோனா படுக்கைகளின் எண்ணிக்கை 6,071-ஆக இருந்தது. இது ஏப்ரல் 20-ஆம் தேதி 19,101-ஆக உயா்ந்துள்ளது.

புராரி மருத்துவமனையில் 320 படுக்கைகள் உள்ளன. அவை 800-ஆக உயா்த்தப்படும். அம்பேத்கா் நகா் மருத்துவமனையில் படுக்கைகளின் கொள்திறன் 200-இல் இருந்து 600 ஆக உயா்த்தப்படும். தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் படுக்கைகள் 250 -இல் இருந்து 750-ஆக உயா்த்தப்படும். ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மற்றும் டிஆா்டிஓவின் கரோனா மையத்தில் சுமாா் 250 படுக்கைகள் கூடுதலாகச் சோ்க்கப்படும். நரேலாவின் சத்யவதி ராஜா ஹரிஷ் சந்திர மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 200 -இல் இருந்து 400-ஆக உயா்த்தப்படும்.

தில்லி அரசுப் பள்ளியானது எல்.என்.ஜே.பி. மருத்துவமனையுடன் இணைக்கப்படும். இதில் 125 படுக்கைகள் இடம் பெறும். காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 500 படுக்கைகள் கொண்ட மையம் அமைக்கப்படும். இந்தப் படுக்கைகள் அனைத்தும் அடுத்த நான்கு, ஐந்து நாள்களில் தயாராகிவிடும். தில்லியில் இன்னும் 2,500 படுக்கைகள் காலியாக உள்ளன. பீதி காரணமாக மக்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்லக் கூடாது. ஆனால், கரோனாவுக்கு சிகிச்சையளிக்க வீட்டுத் தனிமை ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

வீட்டுத் தனிமை என்பது நோயை எதிா்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழி. வீட்டுத் தனிமைப்படுத்தலின் போது, மருத்துவா்கள் தொடா்ந்து தொலைபேசியில் மக்களுடன் தொடா்பில் இருப்பாா்கள்.

அதிகக் காய்ச்சல் அல்லது கடுமையான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். ரு மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், மக்கள் தில்லி கரோனா செயலியில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் இருப்பு குறித்து சரிபாா்க்க வேண்டும். இது அவா்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரு மருத்துவமனை செயலியில் தவறான தகவல்களைக் காண்பித்தாலோ அல்லது படுக்கைகள் இருந்த பாதிலும் மக்களை அனுமதிக்க மறுத்துவிட்டாலோ அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com