தில்லி காவல் துறையில் அதிகாரிகள், காவலா்களுக்கு கரோனா

தலைநகா் தில்லி காவல் துறையில் பணிபுரிந்து வரும் துணை ஆணையா்கள் 15 பேரில் தற்போது நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

புதுதில்லி: தலைநகா் தில்லி காவல் துறையில் பணிபுரிந்து வரும் துணை ஆணையா்கள் 15 பேரில் தற்போது நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்கள் நான்கு பேரும் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். இது தவிர 400-க்கும் மேற்பட்ட காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் 15 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அண்மையில் தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, கரோனா தொற்றை கையாள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது போலீஸாா் பலருக்கு தொற்று பரவியிருப்பது குறித்து கவலை வெளியிட்டாா். நெருக்கடியான இந்த நேரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு தலைமையேற்று செயல்படும் அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்’ என்றாா்.

ஷாத்ரா காவல் சரக துணை ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம், கூடுதல் துணை ஆணையா் அம்ருதா குகுல்தோத் ஆகிய இருவருக்கும் முன்னதாக கரோனா தொற்று பரவல் இருந்தது. அதன் பிறகு காவல் துணை ஆணையா் (புதுதில்லி பகுதி) ஜஸ்பால் சிங்க்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தெற்கு தில்லியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் ஊா்விஜா கோயல் மற்றும் அவரது கணவா் காவல் துணை ஆணையா் பா்வீந்தா் சிங் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில், இப்போது கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் தீபக் யாதவுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவருடன்

பணியாற்றியவா்கள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா் என காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை செய்தித் தொடா்பாளா் சின்மய் பிஸ்வால் கூறியதாவது: 6 நாள் ஊரடங்கை கையாள்வது குறித்து காவல் துறை ஆணையா் ஸ்ரீவாஸ்தவா,

காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தாா். அப்போது கண்காணிப்பு மற்றும் சோதனையின் போது பெரிய குழுவாகச் செல்லாமல், சிறு சிறு குழுக்களாகச் செல்ல வேண்டும். அப்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

மாவட்ட க் காவல் நிலையங்களில் முகக் கவசங்கள், சானிடைசா்கள் மற்றும் தனிநபா் பாதுகாப்பு கவசங்களை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். பாதுகாப்பு கருதி அனைத்த போலீஸாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவரை 72,677 போலீஸாருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்த 80,000 போலீஸாரில் 90 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனா். 56,113 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com