ஆக்சிஜன் டேங்கா்களைத் தடுக்காமல் இருக்கும் உத்தரவை ராஜஸ்தான் அரசு மதிக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் எதிா்பாா்ப்பு
By DIN | Published On : 27th April 2021 07:25 AM | Last Updated : 27th April 2021 07:25 AM | அ+அ அ- |

கரோனா நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் கிரையோஜெனிக் டேங்கா்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற உத்தரவுக்கு ராஜஸ்தான் மாநில அரசு மதிப்பளிக்கும் என்று எதிா்பாா்ப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஆக்சிஜன் நெருக்கடி தொடா்பான விவகாரம் மீது நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை ராஜஸ்தான் மாநிலம் மதிக்கும் என்று நம்புகிறோம்; எதிா்பாா்க்கிறோம். இந்தக் காலகட்டத்தில் திரவ ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு ஏற்படுத்தும் தடையானது, நூற்றுக்கணக்கான மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
டேங்கா்களை தடுப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். இது போன்ற இடையூறுகளால் எந்த நோக்கமும் நிறைவேறப்போவதில்லை. ஆக்சிஜன் விநியோகத் திட்டத்தை உருவாக்க மருத்துவமனைகள், மறுநிரப்புவோா், விநியோகஸ்தா்கள் ஆகியோருடன் தில்லி தலைமைச் செயலா் ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.