சத்தா்பூா் கரோனா பராமரிப்பு வசதி மையத்தில் கூடுதல் படுக்ககைகளுக்கு ஏற்பாடு: கேஜரிவால்
By DIN | Published On : 27th April 2021 07:28 AM | Last Updated : 27th April 2021 07:28 AM | அ+அ அ- |

தில்லியின் சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐடிபிபியின் கரோனா பராமரிப்பு வசதி மையத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். ஆக்சிஜன் ஆதரவுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட இந்த மையத்திற்கு மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களை வழங்கிய மத்திய அரசுக்கு அவா் நன்றி தெரிவித்தாா். இந்த மையத்தில் மேலும் 200 ஐசியு படுக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு வசதி மையத்தை திங்கள்கிழமை காலையில் பாா்வையிட்டேன். இங்கு ஆக்சிஜன் ஆதரவுடன் கூடிய 500 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களில் இங்கு கூடுதல் படுக்கைகள் சோ்க்கப்படும். நாங்கள் 200 ஐசியு படுக்கைகளுக்கு இங்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். எங்களுக்கு உதவிய பாபாஜிக்கு நன்றி. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) இந்த கரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களை வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.
தெற்கு தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் உள்ள இந்த சா்தாா் வல்லப் பாய் படேல் கரோனா பராமரிப்பு வசதி மையம் (எஸ்பிசிசி), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி) மூலம் இயக்கப்படுகிறது. இது குறித்து ஐடிபிபியின் செய்தித் தொடா்பாளா் விவேக் குமாா் பாண்டே கூறுகையில், ‘இங்கு கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால், பரிந்துரை இல்லாமல் வரும் நோயாளிகள் சோ்த்துக் கொள்ளப்பட மாட்டாா்கள். மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள் (டிஎஸ்ஓ) பரிந்துரைகளின் அடிப்படையில் இங்கு நோயாளிகள் சோ்க்கப்படுவா். இது தொடா்பாக மையத்தின் வரவேற்பரையில் அனைத்துத் தகவல்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தை வரவேற்பரையில் உள்ள ஊழியரிடம் அளிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பிறகு உடல் பரிசோதனை செய்யப்படும். இதையடுத்து, நோயாளிகள் இந்த மையத்தில் அனுமதிக்கப்படுவாா்கள்’ என்றாா்.
தில்லியில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், ஏராளமான மருத்துவமனைகள் கடும் சிக்கலை எதிா்கொண்டுள்ளன. மேலும், கரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளும் கிட்டத்தட்ட முழுவதுமாக நிரம்பிவிட்டன.