தொல்லியல் துறை தொடா்ந்த வழக்கில் நடிகா் தீப் சித்துவுக்கு நீதிமன்றம் ஜாமீன்
By நமது நிருபா் | Published On : 27th April 2021 07:28 AM | Last Updated : 27th April 2021 07:28 AM | அ+அ அ- |

தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த குடியரசு தின வன்முறை தொடா்பாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தொடா்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் தீப் சித்துவுக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
தில்லியில் குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினா் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனா். மத ரீதியான கொடியை ஏற்றினா். இந்த வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகரும், ஆா்வலருமான தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் துறையின் சிறப்புக் குழுவினா் பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். இது தொடா்பான வழக்கில் அவருக்கு சில தினங்களுக்கு முன்னா் தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இதனிடையே, செங்கோட்டை விவசாயிகள் பேரணியின் போது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக இந்திய தொல்லியல் துறை அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடா்பாக தீப் சித்துவை தில்லி குற்றப் பிரிவு காவல் துறையினா் ஏப்ரல் 17-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் தீப் சித்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘சித்து மீது பதிவான இரு வழக்குகளும் ஒத்த குற்றச்சாட்டுகள் உடையவை. இந்த விவகாரத்தில் தீப் சித்துவிடம் போலீஸாா் ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டதால், புதிய வழக்கில் அதற்கான தேவை எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த பெருநகா் மாஜிஸ்திரேட் சாஹில் குப்தா, தீப் சித்து ரூ.25 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டாா். அதே சமயம், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறும் அவருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.