கள்ளச் சந்தையில் ஆக்சிஜன் விற்பனை: தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
By DIN | Published On : 27th April 2021 07:25 AM | Last Updated : 27th April 2021 07:25 AM | அ+அ அ- |

ஆக்சிஜன் சிலிண்டா்களை கள்ளச் சந்தையில் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தில்லியில் ஆக்சிஜன் நெருக்கடி விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற நீதிதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது, ஆக்சிஜன் சிலிண்டா்களின் விநியோகம் தில்லியில் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ரூ.1 லட்சம் கேட்பதாக நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘ஆக்சிஜன் சிலிண்டா்களை மீண்டும் நிரப்புவோா், விநியோகம் மற்றும் மறு நிரப்பல்கள் குறித்த விவரங்களை வழங்குவதில்லை. எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு, மறு நிரப்புவோா் விநியோகம் செய்த விவரங்கள் குறித்த தகவல் அரசுக்குத் தேவைப்படும். ஆனால், இது போன்ற விவரங்களைக் கோரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால், அது கடுமையானதாக பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
தில்லிக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமான ஐனாக்ஸ் தரப்பில் அதன் இயக்குநா் சித்தாா்ஜ் ஜெயின், ஆக்சிஜன் விநியோகத்தில் விநியோகஸ்தா்கள் எதிா்கொண்ட பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்திடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்சிஜன் சிலிண்டா்கள் விநியோகமானது உங்கள் (தில்லி அரசு) குழந்தை. இந்த விவகாரத்தில் தில்லி அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள். யாராவது ஆக்சிஜன் சிலிண்டா்களை கறுப்புச் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அத்தகையோரை நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று, மறுநிரப்பும் பணியில் ஈடுபடுவோா், மருத்துவமனைகளுக்கும், பிறருக்கும் தாங்கள் அளிக்கும் ஆக்சிஜன் விநியோகம் குறித்த தகவல்கள் அளிக்கும் விஷயத்தில் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.