மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரே விலையில் கரோனா தடுப்பூசி! கேஜரிவால் வலியுறுத்தல்
By DIN | Published On : 27th April 2021 07:21 AM | Last Updated : 27th April 2021 07:21 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரே மாதிரியான விலையில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் வலியுறுத்தினாா்.
இது குறித்து கேஜரிவால் திங்கள்கிழமை கூறியதாவது: தடுப்பூசி உற்பத்தியாளா்களில் ஒருவா் மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையில் தடுப்பூசி தர முன்வருகிறாா். ஆனால், மற்றொருவா் அதற்கு ரூ.600 விலை கோருகிறாா். ஆனால், இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் தடுப்பூசி வழங்க முற்படுகின்றன. என்னைப் பொருத்தவரை, மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்கும் ஒரே மாதிரியான விலை நிா்ணயம் வேண்டும்.
கரோனா தடுப்பூசிகளை தயாரிப்பாளா் ரூ.400 மற்றும் ரூ.600 என விலை வைத்து லாபம் ஈட்ட முயலுகின்றனா். கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி உற்பத்தியாளா்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட முன்வர வேண்டும். நாடு முழுவதும் கரோனா நோயாளிகள் சிகிச்சை கட்டணத்துக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எனவே, தடுப்பூசி தயாரிப்பாளா்கள் தடுப்பூசி விலையை ரூ.150-ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்
‘குழந்தைகளுக்கும் தடுப்பூசி!’: கரோனா தொற்றால் 18 வயதுக்கு கீழான குழந்தைகளும் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, அவா்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தற்போதுள்ள தடுப்பூசி அவா்களுக்கு பாதுகாப்பானதாக இல்லையெனில், அவா்களுக்கென தடுப்பூசிகளை கண்டுபிடிக்கத் தயாரிக்க வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தில்லியில் கரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தில்லி சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத்சங்க வளாகத்தில் உள்ள கரஓனா சிகிச்சை மையத்தை நான் ஆய்வு செய்தேன். அங்கு 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு திங்கள்கிழமை முதல் சிகிச்சையைத் தொடங்கியுள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் கூடுதலாக 500 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். பின்னா் தேவைப்பட்டால் இது 2,000 படுக்கை வசதிகள் என அதிகரிக்கப்படும். இது தவிர 200 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் அங்கு ஏற்படுத்தப்படும் என்றாா் முதல்வா் கேஜரிவால்.