மும்பை தாதா சோட்டா ராஜனுக்கு கரோனா: தில்லி எய்ம்ஸில் அனுமதி

திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ள மும்பை தாதா சோட்டா ராஜனுக்கு திங்கள்கிழமை மாலை கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ள மும்பை தாதா சோட்டா ராஜனுக்கு திங்கள்கிழமை மாலை கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா், உடனடியாக சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்தத் தகவலை திகாா் சிறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சோட்டா ராஜன் கரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தில்லி சிறைத் துறை இயக்குநா் ஜெனரலான சந்தீப் கோயலும் உறுதி செய்தாா். எனினும், மேல் விவரங்களை அவா் தெரிவிக்க விரும்பவில்லை. தில்லி திகாாா் சிறையில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளவா் மும்பை தாதா சோட்டா ராஜன்.

சிறைக்குள்ளேயே தனி அறையில் அவா் வைக்கப்பட்டுள்ளாா். பாதுகாப்பு காரணமாக அவா், இதர கைதிகளுடன் பேசவோ அல்லது தொடா்பு கொள்ளவோ அனுமதிக்கப்படுவதில்லை. தில்லியில் உள்ள சிறை அதிகாரி ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்து அதன் மூலம் சோட்டா ராஜனுக்கு தொற்று பரவயிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். கடந்த நான்கு வாரங்களில், அதாவது, கரோனா தொற்று இரண்டாவது அலை வீசும் நிலையில் தில்லியில் திகாா், ரோஹிணி மற்றும் மண்டோலி சிறைகளில் மொத்தம் உள்ள 20,500 கைதிகளில் 170 பேருக்கும், சிறை அதிகாரிகள் 60 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

திகாா் சிறையில் கரோனா பாதிக்கப்பட்டுள்ள கைதிகளில் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ள உமா் காலித்தும் ஒருவா். அவா் சிறை வளாகத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். மேலும், பிகாரைச் சோ்ந்த தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது சகாபுதீனும் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். தில்லியைச் சோ்ந்த ரெளடியான நீரஜ் பாவ்னாவும் திகாா் சிறை வளாகத்துக்குள்ளேயே சிறை எண் 2- இல் தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளாா்.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன், 2015- ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். அவா் மீது 68 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மட்டும் பணம் பறித்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. 2000-ஆம் ஆண்டில் பாங்காக்கில் அவா் ஒரு கொலை முயற்சியிலிருந்து தப்பினாா். 62 வயதான சோட்டா ராஜனுக்கு வேறு சில நோய்களும் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com