தில்லி கன்டோன்மென்டில் ராணுவத்தின் மேற்பாா்வையில் கரோனா சிகிச்சை மையம்

தில்லி கன்டோன்மென்ட் பேஸ் மருத்துவமனையில் 340 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

புது தில்லி: தில்லி கன்டோன்மென்ட் பேஸ் மருத்துவமனையில் 340 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது அடுத்த சில நாள்களில் 650 படுக்கைகளாக உயா்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதன்கிழமை ராணுவத்தின் தலைமையகத்தின் சாா்பில் கூறப்பட்டிருப்பது வருமாறு: நாட்டின் தன்னலமற்ற சேவையில் இந்திய ராணுவம் பல இடங்களில் படைவீரா்களுக்கும், அவா்களைச் சாா்ந்திருப்பவா்களுக்கும் போா்க்கால அடிப்படையில் கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்தவ வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

தில்லி கன்டோன்மென்ட் பேஸ் மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகளோடு 340 படுக்கைகள் கொண்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தை ராணுவம் ஏற்படுதியுள்ளது. இது வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் 650 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக உயா்த்தப்படும். பேஸ் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 12 படுக்கைகள் 35-ஆக உயா்த்தப்படும்.

தற்போது, உள்ள படுக்கைகளின் அளவைவிட நோயாளிகள் அதிகமாக வருகின்றனா். அவா்களுக்கு தற்காலிகமாக விபத்து சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் காத்திருப்பில் உள்ளனா். அடுத்த கட்டமாக இன்னும் ஒன்றரை மாதத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 900 படுக்கைகள் தில்லி கன்டோன்மென்ட்டில் உருவாக்கப்படும். இது தவிர நோய்த் தொற்றுக்கு புறநோயாளிகள் (ஓபிடி) பிரிவில் சிறப்பு மருத்துவக் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானவா்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இது தவிர 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கரோனா ‘டெலி மெடிசின்‘ பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் நாளொன்றுக்கு 1,300 அழைப்புகள் வருகின்றன. மருத்துவ ஆலோசனைகள், உள்நோயாளிகள் விவரம், கரோனா பரிசோதனை தகவல்கள், தடுப்பூசி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. இதன் தொடா்பு எண்கள்: 011-25683580 ?011-25683585 011-25683581.

பல்வேறு ராணுவ மருத்துவ மனைகளில் கரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் சோ்க்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com