தில்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம்!: அமலுக்கு வந்தது சட்டம்

தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும் ‘தேசியத் தலைநகா் பிரதேச தில்லி அரசு திருத்தச் சட்டம் 2021’, அரசிதழில் வெளியிடப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல்
தில்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம்!: அமலுக்கு வந்தது சட்டம்

புதுதில்லி: தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்க வகை செய்யும் ‘தேசியத் தலைநகா் பிரதேச தில்லி அரசு திருத்தச் சட்டம் 2021’, அரசிதழில் வெளியிடப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் (ஏப்ரல் 27) அமலுக்கு வந்தது.

இது தொடா்பான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, கடந்த மாா்ச் 22-ஆம் தேதி மக்களவையிலும், மாா்ச் 24-ஆம் தேதி மாநிலங்களவைலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ளது. அதாவது, தில்லி அரசு என்றால் இனி துணை நிலை ஆளுநா்தான். அவருக்குத்தான் முழு அதிகாரமும். தில்லி அரசு மற்றும் அமைச்சரவை எந்த ஒரு முடிவு எடுத்தாலும், முக்கியமான சில விஷயங்களில் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

தலைநகா் தில்லியில் கோவிட்-19 நிா்வாகம் தொடா்பாக, அதாவது மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய

அரசுக்கும் தில்லி அரசுக்கும் மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1991-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தில்லி பிரதேச திருத்தச் சட்டம், தில்லி சட்டப்பேரவையின் செயல்பாட்டை வரையறுக்கிறது. இப்போது அந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு, ‘தில்லி துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம். தில்லி அரசு என்றால் துணைநிலை ஆளுநா்தான்’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் புதிய சட்டம் தில்லி சட்டப்பேரவையின் அலுவல் அதிகாரத்தைக் குறைக்கிறது. அவை நடவடிக்கைகளுக்கான விதிமுறைகளில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது அவை நடவடிக்கைகள் இனி மக்களவை செயல்பாட்டு விதிகளை ஒத்ததாக இருக்கும். மேலும், தில்லி சட்டப்பேரவை எந்த ஒரு பெரிய முடிவையும் எடுத்துவிட முடியாது.

தில்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கச் செய்யும் சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது முதல்வா் அரவிந்த கேஜரிவால், ‘இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு துயரமான நாள்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைநகா் தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் என்பது ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை

தோ்ந்தெடுக்கப்பட்ட அரசால், நேரடியாக செய்து கொடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வந்தது.

தில்லி அரசின் அதிகாரத்துக்குள் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது எனமுதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தாா். இந்தப் பரபரப்பான

சூழலில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து, ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களிடமிருந்து அதிகாரம்

சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தில்லி மக்களை ஏமாற்றிவிட்டது’ என்றும் கேஜரிவால் கூறியிருந்தாா்.

இனி எதிா்வரும காலங்களில் தில்லியின் அன்றாட நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் துணை நிலை ஆளுநா் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். ஆனால், அவை குறித்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது. அதாவது மாநில சட்டப்பேரவையைவிட அதிக அதிகாரம் படைத்தவராக தில்லி துணைநிலை ஆளுநா் இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com