கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு: திமுக எம்.பி. டி.ஆா். பாலுவுக்கு மத்திய அமைச்சா் பதில்

சா்வதேச மாசு வெளியேற்ற அளவுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் கரியமில வாயுக்களை குறைப்பது

சா்வதேச மாசு வெளியேற்ற அளவுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் கரியமில வாயுக்களை குறைப்பது உள்ளிட்ட தேசிய பருவநிலை மாற்றத்திற்கான செயல்திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைகளுக்கான இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்தாா்.

இந்தியாவின் வளா்ச்சித் திட்டச் செயல்பாடுகளால் நச்சு வாயுக்கள் வெளியேற்றம் அதிகமாகியுள்ளதா? புவிவெப்பமடைதலைக் குறைத்திடும் பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவா் டிஆா் பாலு கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய உணவு, நுகா்வோா், சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மக்களவையில் அளித்துள்ள பதில் வருமாறு:

பூமி வெப்பமடைதல் பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து சமாளிக்க வேண்டிய ஒன்றாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் பாரீஸ் உடன்பாடு ஆகிய சா்வதேச ஒப்பந்தங்களை இந்தியா, ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் வெளியேற்றிடும் வாயுக்களின் அளவு மற்றும் விவரங்கள் குறித்து அறிக்கைகளை யுஎன்எஃப்சிசிசி செயலகத்துக்கு முறையாக அனுப்பி வருகின்றோம். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சமூக, பொருளாதார வளா்ச்சி நடவடிக்கைகள் தேவை. இதன் காரணங்களால் மாசுப்புகை வெளியேற்றம் அதிகளவில் இருக்கும் என்பதை ஐ.நா. கட்டமைப்பும், பாரீஸ் உடன்பாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு ஒப்பந்த செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மூன்றாவது (பி யு ஆா்)அறிக்கையின்படி, 2016 -ஆம் ஆண்டில் நிலவளப்பயன்பாடு, வன நிலப்பயன்பாடு மாறுதல்கள் போன்றவைகளின் விளைவாக நாட்டின் மொத்த பசுமைகுடில் வாயுக்கள்(எழ்ங்ங்ய்ட்ா்ன்ள்ங் எஹள்) வெளியேற்ற அளவு 2531.07 மில்லியன் மெட்ரிக் டன் எடைக்கு நிகரான கரியமிலவாயு ஆகும். 2014 - 2016க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மட்டும் பசுமைகுடில் வாயுக்கள் 225 மில்லியன் டன் அளவில் கூடுதலாக இந்தியா வெளியேற்றம் செய்துள்ளது. இது ஆண்டுக்கு 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய அளவில் பாா்த்தால் இந்தியாவின் தனிநபா் பசுமைகுடில் வாயுக்கள் வெளியேற்றம் என்பது 1.96 டன் கரியமில வாயு தான். இது உலக தனிநபா் சராசரி அளவில் மூன்றில் ஒரு பங்காகவே உள்ளது. மேலும், 1850 -ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் இருந்து வெளியேறும் புகை அளவில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம் என்கிற அளவில் தான் உள்ளது.

இதனால் நச்சுவாயு வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இருஆண்டு(ஈராண்டு) கணக்கிலும், தனி நபருக்கான அடிப்படையிலும் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவான அளவாக உள்ளது என்பதோடு ‘குளோபல் காா்பன் பட்ஜெட்‘ எனப்படும் ‘உலக கரிமநிலைக் கணக்கில்‘ இந்தியாவின் முறையான பங்கைவிட குறைவானதாக உள்ளது. எனவே, புவிவெப்பம் அடைவதற்கு வளா்ச்சி அடைந்த நாடுகள்தான் முக்கிய காரணமாக உள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் மாசுவெளியேற்ற அடா்த்தியைக் கணக்கீடு செய்து பாா்த்தால் 2005 ஆம் ஆண்டுக்கும் 2016 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 11 ஆண்டுகளில் 24 சதவீதம் குறைந்துள்ளது. இது, 2020க்கு முன்னா் நாமே தன்னிச்சையாக விதித்துக் கொண்ட இலக்கை, அதாவது 2005 தொடங்கி 2020க்குள் மாசு வெளியேற்றம் 20 முதல் 25 சதவீதம் குறைக்கப்படும் என்ற இலக்கை, நிறைவேற்றிச் சாதனை படைத்துள்ளோம்.

2030ஆம் ஆண்டுக்குள் மாசு புகை வெளியேற்றத்தை 35 சதவீதம் குறைத்தல், 40 சதவீதம் அளவுக்கு எரிபொருள் அற்ற மின் உற்பத்தி, கரியமில வாயுவை அகற்ற புதிய வனப் பெருக்கம் ஆகிய மூன்று அம்சங்களை கருத்தில் கொண்டுள்ளோம்.

மேலும், தற்போது தேசிய பருவநிலை மாற்றத்திற்கான செயல்திட்டம் ஒன்றினையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் சூரிய மின்சாரம், மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன், நீா் வளம், வேளாண்மை, இமயமலை இயற்கை சூழல் வளம், உயிரினங்களுக்கான வளமையான வாழ்விடங்கள், பசுமை இந்தியா, பருவநிலை மாற்றம்சாா் அறிவியல் போன்ற எட்டு அம்சங்களை உள்ளடக்கிய தேசிய செயல்திட்டம் 33 மாநிலங்களிலும் யுனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இவற்றை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களை வழங்கிட தேசிய பருவநிலை மாற்ற செயல் நிதியம் ஒன்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாரீஸ் ஒப்பந்தம் செயல்பாட்டை கண்காணிக்க ஒா் உயா் நிலைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சா் சௌபே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com