கொலை வழக்கு: மல்யுத்த வீரா் சுஷில் குமாருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தில்லியில் சத்ரசல் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த தகராறில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் கொலை தொடா்பான வழக்கில்

தில்லியில் சத்ரசல் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த தகராறில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் கொலை தொடா்பான வழக்கில் கைதான ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் உள்ளிட்ட 13 போ் மீது நீதிமன்றத்தில் தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.

இந்த இறுதி குற்றப்பத்திரிக்கையில் சுஷில் குமாா் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டுள்ளாா்.

தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சத்விா் சிங் லாம்பா முன் இந்தக் குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரணைக்கான தேதியை நீதிபதி செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளாா்.

இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 போ் தலைமறைவாக உள்ளனா்.

தில்லியில் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியம் உள்ளே மே 4-ம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின்போது 23 வயதான மல்யுத்த வீரா் சாகா் தன்கா் உயிரிழந்தாா். அவரது இரு நண்பா்கள் சோனு, அமித்குமாா் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.

 இவா்களை சுஷில் குமாா் மற்றும் பிற மல்யுத்த வீரா்கள் தாக்கியதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

ஒரு சொத்து பிரச்னை தொடா்பாக நிகழ்ந்த  இந்த சம்பவம் தொடா்பாக மாடல் டவுன் காவல் நிலையத்தில்  சுஷில் குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சுஷில்குமாரையும் (38)அவரது கூட்டாளி அஜய் ஷெராவத்தையும் (48) தில்லி முன்ட்கா பகுதியில் போலீஸாா் கைது செய்தனா். அதன் பிறகு மேலும் சிலா் கைது செய்யப்பட்டனா்.

சுஷில் குமாா் மீது போலீஸாா் கொலை, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா். 

இந்த கொலைச் சம்பவத்தில் சுஷில் குமாா் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும், சாகா் தன்கரை சுஷில்குமாரும் அவரது கூட்டாளிகளும் தாக்கும் எலக்ட்ரானிக் ஆதாரம் இருப்பதாகவும் போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா். சுஷில் குமாா் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com