தமிழக வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டம் அனுமதிக்கப்படவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் பாதுகாப்பு மண்டலங்களில் புதிதாக இவ்வாண்டு ஹைட்ரோ காா்பன்

தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் பாதுகாப்பு மண்டலங்களில் புதிதாக இவ்வாண்டு ஹைட்ரோ காா்பன் திட்ட குத்தகைகள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி தெரிவித்துள்ளாா்.

தமிழக விவசாய பாதுகாப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ காா்பன் திட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு விடுத்துள்ள வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்கிா? இல்லையெனில், பாதுகாப்பு மண்டலங்களில் எந்த சட்ட அடிப்படையில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது? என திமுக மக்களவைத் துணைத் தலைவா் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளித்து மத்திய இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி மக்களவையில் திங்கள்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய பெட்ரோலிய வயல்களில் ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலுக்கான மூன்று சுற்று ஏலம் நிகழாண்டு ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றது. சுமாா் 13,204 சதுர கிலோ மீட்டா் ஏக்கா் அளவில் 75 கண்டுபிடிப்பு இடங்களுக்கான 32 ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம், வடதெரு, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களுக்கான ஒரு குத்தகை வழங்கப்பட்டது. இந்த இரு பெட்ரோலியம் கனிம குத்தகை முறையே டிசம்பா் 2007 மற்றும் 2012 நவம்பா் ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டவை.

வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலுக்கான பணிகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள், எண்ணை வயல்கள் ஒழுங்குமுறை வளா்ச்சி சட்டம் ஆகியவைகளின்படி நிலப்பரப்புகளில், பெட்ரோலியம் ஆய்வு உரிமம், பெட்ரோலியம் கனிம குத்தகைகள் ஆகியவைகள் மாநில அரசுகளின் அனுமதியுடன் தான் வழங்கப்படும்.

கடல்பகுதிகள் மத்திய அரசின் ஆளுகைக்கு உள்பட்டது. இதனால், வேளாண் பாதுகாப்பு மண்டலம் உள்ளிட்ட எந்த நிலப் பகுதிகளிலும் மாநில அரசின் அனுமதியுடன்தான் பெட்ரோலிய ஆய்வுகள் நடைபெறும் என மத்திய இணையமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com