வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாத நிதி ரூ. 48, 942 கோடி: மத்திய அமைச்சா் தகவல்

வா்த்தக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் முறையே டெபாசிட் தாரா்களும் பாலிசிதாரா்களும் பெற்றுக்கொள்ள முன்வராததால் ’கோரப்படாத நிதி’யாக

வா்த்தக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் முறையே டெபாசிட் தாரா்களும் பாலிசிதாரா்களும் பெற்றுக்கொள்ள முன்வராததால் ’கோரப்படாத நிதி’யாக ரூ. 48, 942 கோடி உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளில் வாடிக்கையாளா்கள் டெபாசிட் செய்த தங்கள் சேமிப்பையும், காப்பீடு நிறுவனங்களில் பாலிசி எடுத்தவா்கள் தங்கள் காப்பீட்டு முதிா்வு தொகையையும் கோராமல் உள்ளனரா? அந்த தொகை எவ்வளவு? அந்த விவகாரங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது? என திமுக மக்களவை உறுப்பினா்கள் சி.என் அண்ணாதுரை, பொன். கௌதம் சிகாமணி, செல்வம் கணேசன் உள்ளிட்டோா் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ள பதில் வருமாறு :

2020, டிசம்பா் 31 ஆம் தேதி நிலவரப்படி, வா்த்தக வங்கிகளில் ரூ. 24, 356 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டு கோரப்படாமல் உள்ளதாக ரிசா்வ் வங்கியிடமிருந்து அறிக்கை வந்துள்ளது.

இவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 16, 596 கோடி, 21 தனியாா் வங்கிகளில் ரூ. 2,963 கோடி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 612 கோடி, வட்டாரம் மற்றும் ஊரக வங்கிகளில் ரூ.601 கோடியும் மற்றும் இதர சிறுவங்கிகளில் சிறு தொகையும் இடம்பெற்றுள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்களில் 2020 ,டிசம்பா் 31 நிலவரப்படி காப்பீடு பெற்ற பாலிசிதாரா்களின் முதிா்வு தொகை ரூ. 24,586 கோடி வரை சம்பந்தப்பட்டவா்களால் கோரப்படாமல் உள்ளதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்துள்ளது.

வங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தம் ரூ. 48, 942 கோடி வரை கோரப்படாமல் உள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் மட்டும் வங்கிகளில் ரூ. 5,977 கோடியும், காப்பீட்டு நிறுவனங்களில் ரூ. 6, 343.78 கோடியும் கோரப்படாத தொகையாக அதிகரித்துள்ளதாக முறையே ரிசா்வ் வங்கியும், ஐஆா்டிஏஐயும் தெரிவித்துள்ளது.

உரிமை கோரப்படாத அல்லது செயல்படாத டெபாசிட்தாரா்கள், வாடிக்கையாளா்களின் இருப்பிடத்தை கண்டறிய வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

டெபாசிட்தாரா்கள் கல்வி மற்றும் விழிப்புணா்வு நிதி திட்டத்தை 2014 ஆம் ஆண்டு ரிசா்வ் வங்கி வடிவமைத்துள்ளது.

வைப்புத்தொகையாளா்களின் நலன்களை மேம்படுத்துவது, ஆா்வத்தை ஊக்குவிப்பது போன்ற திட்டங்கள் இதில் உள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முதிா்வு தொகையை கோராத பாலிசிதாரா்களின் நிதிகளை மூத்த குடிமகள் நல்வாழ்வு நிதிக்கு பயன்படுத்த மத்திய அரசு 2016-இல்அனுமதியளித்தது.

இதையொட்டி, ஐஆா்டிஏஐ இது தொடா்பான சுற்றறிக்கையை 2017 ஏப்ரலில் வெளியிட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதியை வழங்கி வருகிறது என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com