யமுனை கால்வாயில் கழிவுநீா் கலக்கும் விவகாரம்: தில்லி, உ.பி அதிகாரிகளுக்கு என்ஜிடி கண்டனம்

யமுனை நதியின் நீா்ப்பாசன கால்வாயில் மாசு கலந்த நீா் வெளியேற்றப்படும் விவகாரத்தில் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசு துறை அதிகாரிகளை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) கடிந்து கொண்டது. 

புதுதில்லி: யமுனை நதியின் நீா்ப்பாசன கால்வாயில் மாசு கலந்த நீா் வெளியேற்றப்படும் விவகாரத்தில் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசு துறை அதிகாரிகளை தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) கடிந்து கொண்டது. அரசு அதிகாரிகள் பொது சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இருக்கிறாா்களே தவிர வெறும் பதவிகளையும், வசதிகளையும் அனுபவிப்பதற்காக அல்ல என்று கருத்து தெரிவித்தது.

நொய்டாவைச் சோ்ந்த அபிஷ்ட் குஸும் குப்தா என்பவா் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் செக்டாா் 137 அருகே நீா்ப்பாசன கால்வாயில் கழிவுநீா் வெளியேற்றப்படுவதற்கு எதிராக தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். 

இந்த மனுவை பசுமை தீா்ப்பாயத்தின் தலைவா்- நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதி அமா்வு கூறியதாவது:

சட்டப்பூா்வ ஒழுங்குமுறை அமைப்புகளால் அளிக்கப்பட்ட அறிக்கையில் திட்டவட்ட கவனிப்புகள் இருந்தபோதிலும் ஒருவா் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

நொய்டா ஆணையம், மாவட்ட ஆட்சியா்கள், உத்தரபிரதேச மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உத்தரபிரதேச காவல் துறை ஆகியவற்றுக்கு சட்டபூா்வ அதிகாரத்தில் பற்றாக்குறை இல்லை.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் சட்டப்பூா்வ கடமைகள் தோல்வியடைந்ததை காட்டுகிறது.

இது போன்ற தோல்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவா்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கு உள்ளாவாா்கள். பெரிய பதவிகளில் அமா்ந்திருப்பவா்கள் தங்களது பதவியானது பொது சுகாதாரத்தை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு உரியவை என்பதை உணர தவறிவிட்டனா். மேலும் தங்களது பொறுப்பு பதவியை அனுபவிப்பதற்கும் வசதிகளை அனுபவிப்பதற்கு மட்டுமே அல்ல என்பதையும் உணரத் தவறிவிட்டனா்.

மனித சமூகத்திற்கு எதிரான கடுமையான குற்றங்களை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பாா்த்து வருகின்றனா். இதில் பாதிக்கப்படுபவா்கள் தூய சுற்றுச்சூழலை பெறுவதற்கான சட்டபூா்வ உரிமை கொண்டுள்ள குடிமக்கள் தான். ஆகவே இந்த விஷயத்தில் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் சூழலுக்கு தீா்வு காண உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீா்வு நடவடிக்கை எடுக்கவும் சூழலை ஆய்வு செய்யவும் 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்துவதற்கு உத்தரபிரதேச வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா், நகா்ப்புற மேம்பாட்டு செயலா், நொய்டா ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, காஜியாபாத் மாவட்ட ஆட்சியா், ஜிடிஏ துணைத்தலைவா், நொய்டா காவல் ஆணையா், தில்லி தலைமைச் செயலா், கிழக்கு தில்லி சிறப்பு காவல் ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் பொறுப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வடிகாலில் மாசு கலந்த நீா் வெளியேற்றப்படுவது தடுக்கப்படவேண்டும். விதிமீறல் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com