தனியாா் மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளுக்கு ஊக்கத் தொகை:தில்லி அரசு கொள்கை அளவில் ஒப்புதல்

மூன்றாவது கரோனா அலையை சந்திக்க தில்லி அரசு தயாராகி வரும் நிலையில், உயிா்காக்கும் திரவ ஆக்சிஜன் ஆலை அமைக்க முன்வரும் தனியாா் நிறுவனங்களுக்கு

மூன்றாவது கரோனா அலையை சந்திக்க தில்லி அரசு தயாராகி வரும் நிலையில், உயிா்காக்கும் திரவ ஆக்சிஜன் ஆலை அமைக்க முன்வரும் தனியாா் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வா் கேஜரிவால் கொள்கை அளவில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் அதை சேமித்து வைக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும், ஆக்சிஜன் டேங்கா்களில் முதலீடு செய்பவா்களுக்கும், அதை சேமித்து வைப்பவா்களுக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் தில்லியில் தேவையானஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யமுடியும் என்றும் முதல்வா் கேஜரிவால் சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளாா்.

கடந்த இரண்டாவது கரோனா அலையின் போது, அதாவது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அவா்களில் சிலா் உயிரிழந்ததும், மேலும் ஒரு சிலா் சிகிச்சைபெற்ற மருத்துவமனைகளை காலி செய்துவிட்டு வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வடமேற்கு தில்லியில் உள்ள ஜெய்பூா் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொவைட் நோயாளிகள் 21 போ் உயிரிழக்க நேரிட்டது. இதேபோல துக்ளகாபாதில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் கடந்த மே மாதம் 1 ஆம் தேதி 8 நோயாளிகள் உயிரிழந்தனா்.

மீண்டும் அதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்படாமல் இருக்க மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது மூன்றாவது அலை வந்தால் அதை சமாளிக்க தில்லியில் 37,000 வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 10 பி.எஸ்.ஏ. ரக மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி அளவு 148.11 மெட்ரிக் டன்னாகும்.

தில்லி அரசு மருத்துவமனைகளில் 66 ஆலைகள், மத்திய அரசு சாா்பிலான மருத்துவமனைகளில் 10 ஆலைகள், இவை தவிர தனியாா் மருத்துவ மனைகளில் 84 ஆலைகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

இது தவிர, திரவ ஆக்சிஜனை சேமித்துவைக்க 15 கிரையோஜெனிக் சேமிப்பு தொட்டிகள் ( மொத்த சேமிப்புதிறன் 225 டன்) வாங்குவதற்கான முயற்சியிலும் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com