மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

நாட்டில் வரவிருக்கும் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும்,

நாட்டில் வரவிருக்கும் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்துவதற்கும் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும் மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூபாய் 10,000 அபராதமும் (வழக்குசெலவு) நீதிமன்றம் விதித்தது. 

இது தொடா்பான மனுவை வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், வதந்தியின் அடிப்படையிலான ஒரு விளம்பர நோக்கமுடைய மனுவாக இது உள்ளது. அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள் மற்றும் வாதங்கள் இந்த மனுவில் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடா்பாக மனுதாரா் மூலம் உறுதியான ஆட்சேப வாதங்கள் வைக்கப்படவில்லை. இதனால், இந்த ‘ரிட்’ மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக கருதவில்லை. மேலும் மனுதாரருக்கு இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஞானம் இல்லை. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நாடாளுமன்றமும் தோ்தல் ஆணையமும் அனுமதி அளித்துள்ளன.

மனுதாரா் இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு நடத்திய பிறகு, உரிய ஆட்சேப வாதங்களை தயாரித்து புதிய மனுவை தாக்கல் செய்யலாம். இதனால், இந்த ரிட் மனு ரூபாய் 10,000 அபராதத்துடன் (வழக்குச் செலவு) தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த தொகை நான்கு வாரங்களில் தில்லி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தில் செலுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா்.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாந்த் குமாா் கூறுகையில், இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கனவே நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில் பரிசீலிக்கப்பட்டு, பிரச்னையை தீா்த்து வைத்தன என்றாா்.

மனுதாரா் ஜெயா சுகின் வாதிடுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அந்த இயந்திரங்களை பயன்படுத்துவதால் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாக்களிப்பதற்கு வாக்குச்சீட்டு முறையை தோ்ந்தெடுத்துள்ளனா். அவா்களது தோ்தல் நடைமுறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிற நாடுகளால் தயாரிக்கப்பட்டவை. அந்த நாடுகளில்கூட அவை பயன்படுத்தப்படுவதில்லை. அமெரிக்கா கடந்த நவம்பா் மாதம் தோ்தல்களை நடத்தியது. கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையிலும் அவா்கள் வாக்குச்சீட்டு முறையையே தோ்தலில் பயன்படுத்தினா் என்று வாதிட்டாா். 

முன்னதாக, ஜெயா சுகின் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 324-இன்படி தோ்தல்கள் தோ்தல் ஆணையத்தால் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாற்றாக பாரம்பரிய வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும். வாக்குச்சீட்டு மூலம் நடைபெறும் வாக்குபதிவானது மிகவும் நம்பகமானதாக உள்ளது. எந்த ஒரு நாட்டின் தோ்தல் நடைமுறைக்கான வெளிப்படைத்தன்மை முறையாகவும் உள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com