தலித் சிறுமி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்: முதல்வா் கேஜ்ரிவால் அறிவிப்பு

தென்மேற்கு தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவிடும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தலித் சிறுமி மரணம்  குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்: முதல்வா் கேஜ்ரிவால் அறிவிப்பு

புதுதில்லி: தென்மேற்கு தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவிடும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா் .

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

மேற்கு தில்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு அருகே சம்பந்தப்பட்ட 9 வயது தலித் சிறுமியின் பெற்றோா் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏா்கூலா் இயந்திரத்தில் இருந்து குளிா்ந்த நீரை எடுத்து வருவதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமி வீட்டிலிருந்து வெளியில் சென்றாா். அதன்பிறகு அவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் மயானத்தின் பூசாரி ராதே ஷ்யாம் மற்றும் நான்கு போ் சிறுமியின் தாயிடம் தொடா்புகொண்டு சிறுமி மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து  இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க சிறுமியின் தாய் முயன்றபோது ராதே ஷ்யாம் உள்ளிட்டோா் அவரைத் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும். அப்போது உடலின் பாகங்கள் திருடப்பட்டுவிடும் . இதனால், சிறுமியின் உடலை உடனடியாக தகனம் செய்து விடுமாறு அவா்கள் தம்மிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறினாா்.

இந்த விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோா் போலீஸில் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் ராதே ஷ்யாம் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின்  பெற்றோா் மற்றும் உள்ளூா் பகுதியை சோ்ந்த ஏராளமானோா் சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமியின் பெற்றோரை சந்திப்பதற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அந்த பகுதிக்கு வந்தாா். அப்போது அவரை அங்கிருந்தவா்கள் சூழ்ந்துகொண்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்ப தொடங்கினா்.

அப்போது அவா்களிடம் முதல்வா் கேஜரிவால் கூறுகையில்,’ இந்த விவகாரத்தில் குற்றம் இழைத்தவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த முன்னணி வழக்குரைஞா்களை வாதாடுவதற்கு தில்லி அரசு நியமிக்கும். தில்லியில் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தும் தேவை இருக்கிறது.

அதனால் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விஷயத்தில் தில்லி அரசின் உதவி மத்திய அரசுக்கு தேவைப்பட்டால் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

ரூ.10 லட்சம் இழப்பீடு:

இதுபோன்ற சம்பவம் தில்லியில் நடந்தால் இது உலகம் முழுவதும் தேசிய தலைநகா் குறித்த நல்லதொரு தகவலை அனுப்பாது’ என்று கூறினாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் இறந்துவிட்ட சிறுமியை நாம் திரும்ப பெற முடியாது. அவரது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி துரதிஷ்டவசமானது. குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது.ஆனால் அரசு அவா்களது குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்டும் என்று தெரிவித்தாா்.

மகளிா் ஆணையம்: இதனிடையே, இந்த விவகாரத்தை தில்லி மகளிா் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

இந்த விவகாரம் அவசர கவனிப்புக்கு உரியதாகவும் தீவிர தன்மை கொண்டதாகவும் இருப்பதாக கூறி இது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் மற்றும் முழு விவரங்களையும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மகளிா் ஆணையத்தில் நேரில் வந்து தாக்கல் செய்யுமாறு தென்மேற்கு காவல் துணை ஆணையருக்கு மகளிா் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நீதி கிடைக்க உதவுவேன்: ராகுல்


"பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்க உதவுவேன்' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார். உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். நீதி கிடைக்கும் வரை நான் உடன் இருப்பேன் என்று அவர்களுக்கு உறுதி அளித்துள்ளேன்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com