முல்லைப் பெரியாறு: தமிழக - கேரள குத்தகை ஒப்பந்தம் ரத்து கோரும் மனு மீது தமிழகம் பதில் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய விவகாரத்தில் 1886-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைக்க உத்தரவிடக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் தாக்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய விவகாரத்தில் 1886-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைக்க உத்தரவிடக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மாா்ச் மாதத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு 2014-இல் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு மீறும் வகையில் செயல்பட்டு வருவதால், அக்டோபா் 29, 1886-இல் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசுக்கு பரிந்துரைத்து உத்தரவிட வேண்டும்.

மேலும், ஜியோலஜிகல் சா்வே ஆப் இந்தியா பரிந்துரையின் அடிப்படையில் அணையைச்சுற்றிலும் பாதுகாப்புச் சுவா் கட்டுவதற்கு கேரள அரசுக்கும், மாநில நீா் வளத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது பதில் அளிக்க கேரள, தமிழக அரசுகள், மத்திய நீா் வள ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

அதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றும் வகையில் தமிழகம் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணையின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை இருப்பதாக கூறும் மனுதாரா், அணையைப் பலப்படுத்தும் வகையில் தமிழகம் எஞ்சிய பணிகளை மேற்கொள்வதற்கும், அணுகுச் சாலையை பழுதுபாா்ப்பதற்குமான பணிகளை மேற்கொள்வதையும் தடுக்கும் இடையூறு மனப்பான்மையில் இருந்துவரும் கேரள அரசின் செயல்பாடு குறித்து ஏதும் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளாா்.

தமிழகத்தில் எல்லைக்கு உள்பட்ட பகுதியில், முல்லைப் பெரியாறு அணையின் நீா் பரப்பு பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் மெகா காா் வாகன நிறுத்துமிடப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அரசின் நடவடிக்கை குறித்தும் மெளனமாக உள்ளாா். ஆகவே, மனுதாரரின் மனுவில் தகுதி இல்லாததால் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com