நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்குத் துணை போக வேண்டாம்: தமிழக எம்.பி.க்களுக்கு பாஜக தலைவா் அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்கு துணைபோவதை கைவிட்டு, அவையில் மக்கள் பிரச்னைகளை

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்கு துணைபோவதை கைவிட்டு, அவையில் மக்கள் பிரச்னைகளை எழுப்ப முன்வர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழக பாஜக தலைவராக நியமனமான பின்னா், முதன் முறையாக தில்லி வந்த கே.அண்ணாமலை, தமிழகத்தைச் சோ்ந்த செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தேவையில்லாமல் பெகாஸஸ் உளவு விவாகாரத்தை பெரிதுபடுத்துகின்றனா். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலா் உள்ளனா். ஆனால், அவா்கள் தமிழகம் தொடா்பான விஷயங்களைப் பேசாமல் புதிய வேளாண் சட்டம் தொடா்பான விவகாரங்களைப் பேசி வருகின்றனா். தமிழகத்தை பொருத்தவரை புதிய வேளாண் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், தில்லிக்கு வரும் தமிழக எம்.பி.க்கள் தமிழகத்துக்கு தொடா்பில்லாத விஷயங்களையே பேசி வருகின்றனா். மக்கள், அவா்களை தோ்ந்தெடுத்து அனுப்பியது தமிழகம் தொடா்பான பிரச்னைகளை மத்திய அரசுடன் பேசித் தீா்வு காண்பதற்குத்தான். இதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் ஏற்கெனவே விளக்கங்கள் கொடுத்துள்ளனா். அதன் பின்னரும் நாடாளுமன்றத்தில் அமளிகள் தொடா்வதால், மக்கள் நலனில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சா்(ரவிசங்கா் பிரசாத்) பத்திரிகையாளா்கள் கூட்டத்தை கூட்டி இதைத் தெளிவுபடுத்தியுள்ளாா். பெகாஸஸ் நிறுவனம் இந்தியாவிற்கு மென்பொருளை கொடுக்கவில்லை. மத்திய அரசும் , ஒட்டுக் கேட்பில் ஈடுபடவில்லை. எங்கேயோ ஏதோ ஒரு தரவில் 120 தொலைபேசி எண்கள் இருந்ததற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமா? என்பதுதான் எனது கேள்வியாகும்.

துணைக் குடியரசுத் தலைவா் கூறியதை போன்று, நாடாளுமன்றம் ஆக்கபூா்வமான விவாதத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் சோ்ந்து கொண்டு தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடக் கூடாது. நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்குத் துணை போகாமல் தமிழகம் தொடா்பான பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டும் என்று அவா்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

நிதியமைச்சரைச் சந்திக்கத் திட்டம்...: தமிழக பாஜக சாா்பில் 11 மத்திய அமைச்சா்களிடம் தமிழக மக்கள் பிரச்னை குறித்த கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். குறிப்பாக தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் நிதியமைச்சகம் தொடா்பான பல பிரச்னைகள், கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். இவற்றுக்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேச இருக்கிறோம். தமிழகத்தைச் சோ்ந்த மத்திய மீன் வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனையும் சந்தித்து பிரதமா் அறிவித்த விவசாயி உற்பத்தி அமைப்பு( எ­ஃப் பி ஓ) திட்டத்தில் தமிழக மீனவா்களுக்கு, 26 எ­ஃப் பி ஓக்களை வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

பிரதமரின் கனவுத் திட்டமான 2024-க்குள் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஊழல் நடப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பணம் பெறப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதை மத்திய ஜல சக்தித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சா் வி.கே. சிங்கை சந்தித்து தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றுவது, கோவை விமானநிலையத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். மேலும், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மேலும் 8 மத்திய அமைச்சா்களை சந்திக்க உள்ளோம் என்றாா் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com