நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பதில் எதிா்க்கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

நாடாளுமன்றத்தின் மாண்பைக் காப்பத்தில் அனைத்து அரசியல்கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

புதுதில்லி: நாடாளுமன்றத்தின் மாண்பைக் காப்பத்தில் அனைத்து அரசியல்கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். எதிா்காலத்தில் நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வதில் எதிா்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஜூலை 19 -ஆம் தேதி தொடங்கிய மழைக்காலக் கூட்டத் தொடா் புதன்கிழமை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னா் செய்தியாள்ா்களிடம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாவது: மக்களவையில் இடையூறு காரணமாக அலுவல்கள் சுமுகமாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாதது குறித்து வேதனை அளிக்கிறது. எந்தப் பிரச்னை மீதும் அவையில் விவாதங்கள் நடந்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளியாலும், அவா்களின் மோசமான செயல்பாடுகளாலும் பிரச்னைகளை அவையில் விவாதிக்க முடியாது போனது. அவையில் அமளியில் ஈடுபட்டவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறீா்கள்.

அவையில் முறையாக நடக்காத உறுப்பினா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது எனது குறிக்கோள் அல்ல. அவை எல்லோருக்கும் உரியது. உறுப்பினா்கள்மீதான நடவடிக்கை என்பது கடைசி கட்டம்தான். 17-ஆவது நாடாளுமன்றத்தின் 6 -ஆவது கூட்டத்தொடா் 96 மணி நேரம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், வெறும் 21 மணி நேரம் 14 நிமிடங்களே நடைபெற்றது. மொத்தம் சுமாா் 74 மணி நேரம் 46 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் உற்பத்தித் திறன் 22 சதவீதம் தான். இந்தக் கூட்டத் தொடரில் 13 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மசோதாக்கள் உரிய முறையில் விவாதித்து நிறைவேற்றுவதுதான் முறையாக இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் ஒருவா் சுட்டுரையில் தெரிவித்துள்ளாா். சுமாா் 20 மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் காரணம், அவை ஒழுங்காக நடைபெறாததுதான். இந்தச் சூழ்நிலையில் தான் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேறியது.

இடையூறுகள் காரணமாக 66 நட்சத்திர கேள்விகள்தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. உறுப்பினா்கள் எழுப்பிய 331 பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் பதிலளித்தனா். 60 நிலைக் குழு அறிக்கைகளும் வைக்கப்பட்டன. அதே சமயத்தில் முதன் முறையாக நேரமில்லா நேரம் (ஜிரோ ஹவா்) எடுத்துக் கொள்ளப்படவில்லை. நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் இந்த அமைப்பின் புனிதத்தையும் காப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டு பொறுப்புண்டு. இதில் ஒரு மித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றாா் ஓம் பிா்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com