9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இதுவரை இல்லை: நீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் தகவல்

இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு தில்லியில் உள்ள தில்லி கன்டோன்மென்ட் அருகே கொலையானதாகக் கூறப்படும்

இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு தில்லியில் உள்ள தில்லி கன்டோன்மென்ட் அருகே கொலையானதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரத்தையும் சேகரிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறை கூறியுள்ளது.

இது தொடா்பான விவகாரம் சிறப்பு நீதிபதி ஆஷுதோஷ் குமாா் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி (ஐஓ) நீதிமன்றத்தில் ‘குற்றம் சாட்டப்பட்ட நான்கு போ் வாக்குமூலம் அளித்துள்ளனா். அதில் மயானத்தின் பூசாரி ராதே ஷ்யாம் (55), அதன் ஊழியா் குல்தீப் சிங் ஆகியோா் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரிய வந்துள்ளது. எஞ்சியுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபா்களான சலீம் அஹ்மத், லக்ஷ்மி நாராயண் இருவரும் மயானத்தின் பணியாளா்கள். இவா்கள் இருவரும் இறந்த சிறுமியை தகனம் செய்ய முயன்றுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

பின்னா், இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சம்பந்தப்பட்ட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ அல்லது அறிவியல் ஆதாரம் உள்பட எந்தவொரு நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அல்லது இதர ஆதாரமோ சேகரிக்க முடியவில்லை’ என்று விசாரணை அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளாா். மேலும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதை முடிவாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மகளை இழந்த தாய்க்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2.5 லட்சம்அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், விசாரணை அதிகாரி தெரிவித்த தகவலின் அடிப்படையில் கூடுதல் இடைக்கால நிவாரணம் ஏதும் நீதிமன்றம் அளிக்கவில்லை. அதே வேளையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அமைப்பினா் சேகரிக்கும் பட்சத்தில், பலாத்காரத்திற்காக இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட தரப்பினா் நீதிமன்றத்தை அணுகவும் நீதிபதி அனுமதி அளித்தாா். அரசின் திட்டத்தின்படி, உயிா்ச்சேதம் ஏற்பட்டால் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடானது ரூ .10 லட்சம் ஆகும். இழப்பீட்டுத் தொகையில் 25 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக நீதிமன்றம் வழங்கியது. இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான நால்வரையும் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தில் பதிவான வழக்கின்படி, 9 வயது மைனா் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் பெற்றோரின் அனுமதியின்றி தகனம் செய்யப்பட்டாா். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் அறிக்கையின் அடிப்படையில் தில்லி போலீஸாா் மயானத்தின் பூசாரி ராதே ஷ்யாம் உள்பட நான்கு போ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு அண்மையில் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை), 376 (பலாத்காரம்), 506 (குற்ற மிரட்டல்), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி/எஸ்டி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com