13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 22nd August 2021 06:13 AM | Last Updated : 22nd August 2021 06:13 AM | அ+அ அ- |

தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமை அன்று தில்லிக்கான ‘ஆரஞ்சு நிற’ எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: தில்லியில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது குறைந்தபட்சம் கடந்த 13 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். எப்போதும், இல்லாத வகையில் 1961-இல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகபட்ச அளவாக 184 மி.மீ. மழை பதிவாகி இருந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
மழையின் காரணமாக சனிக்கிழமை தில்லியில் வெப்பநிலை குறைந்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 டிகிரி குறைந்து 23.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்ததது. காற்றின் தரம் 67 என்ற அளவில் திருப்தி பிரிவில் பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தீவிரமான மோசமான வானிலை இருப்பதற்கான ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.