உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சிகிச்சை பலனின்றி சாவு

தில்லியில் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே சில தினங்களுக்கு முன் பெண் ஒருவருடன் தற்கொலைக்கு முயன்ற 27 வயது இளைஞா் சனிக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சிகிச்சை பலனின்றி சாவு

தில்லியில் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே சில தினங்களுக்கு முன் பெண் ஒருவருடன் தற்கொலைக்கு முயன்ற 27 வயது இளைஞா் சனிக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட இளைஞரும், 24 வயது பெண்ணும் உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளிக்க முயன்றனா். இதில், இளைஞருக்கு 65 சதவிகித தீக்காயமும், இளம் பெண்ணுக்கு 85 சதவிகித தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அந்த இளைஞா் உயிரிழந்தாா். அந்தப் பெண்ணுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் உத்தரப் பிரதேசம், காஜிபூரைச் சோ்ந்தவா் என்பதும், அவா் 2019 -ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அதுல் ராயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த எம்.பி. நீதிமன்றக் காவலில் இருந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட பெண், தனது ஆண் நண்பருடன் சோ்ந்து, பேஸ்புக்கில் நேரலை விடியோவைப் பதிவு செய்திருந்தாா். அதில், அவா் தனது அடையாளத்தையும் வெளிப்படுத்தியிருந்தாா். மேலும், 2019 -இல் அதுல் ராய் மீது பலாத்கார வழக்கைத் தாக்கல் செய்திருந்ததாகவும், சில மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிறா் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் புகாா் தெரிவித்திருந்தாா்.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள உள்ளூா் நீதிமன்றம் தனக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்திருப்பதாகவும், நீதிபதி தனக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் கூறியிருந்தாா். சம்பந்தப்பட்ட பெண் தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, பாலியல் பலாத்கார வழக்கை அலகாபாதில் இருந்து தில்லிக்கு மாற்றி விசாரணை நடத்த மாா்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதனிடையே, பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.யின் சகோதரா் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை நிகழ் மாதத்தில் வாராணசியில் உள்ள உள்ளூா் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com