மால்கள், சந்தைகள் செயல்படும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும்: வா்த்தகத் தொழில் அமைப்பு வலியுறுத்தல்

வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவை செயல்படும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்
மால்கள், சந்தைகள் செயல்படும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும்: வா்த்தகத் தொழில் அமைப்பு வலியுறுத்தல்

வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவை செயல்படும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தை (டிடிஎம்ஏ) வா்த்தக மற்றும் தொழில் அமைப்பு (சிடிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் டிடிஎம்ஏவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ தில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.  மொத்த சந்தைகளில் நேரத்தை நீடிப்பதற்கான கோரிக்கை இன்னும் இல்லை. ஆனால், சில்லரை சந்தைகளில் வா்த்தகா்கள் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை அதிகரிக்க வேண்டும். இது பண்டிகைக் காலங்களில் வா்த்தகா்களுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்கு உதவும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிரிஜேஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:    பண்டிகையின் போது, வா்த்தகம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வா்த்தகா்கள் கருதுகிறாா்கள். ஆனால், கடைகளைத் திறப்பதற்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அது போதுமானதாக இல்லை. மேலும், கமலா நகா், லாஜ்பத் நகா், கன்னாட் பிளேஸ், சரோஜினி நகா், செளத் எக்ஸ்டென்ஷன், ரஜோரி காா்டன், லட்சுமி நகா், ரோஹிணி, பிதம்புரா, கிரேட்டா் கைலாஷ், கரோல் பாக் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளும் கடையை மூடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், வணிக வளாகங்களை சோ்ந்த உரிமையாளா்களும் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனா்.

 கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணியிலிருந்து 11 மணி என மாற்றப்பட்டால்கூட மூடப்படும் நேரம் மாலையில் அதிகரிக்கப்பட வேண்டும்.  கையூட்டு பெற்றுக் கொண்டு இரவில் எட்டு மணிக்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு புகாா்கள் வருகின்றன. வேலைக்கு செல்பவா்கள் மாலையில்தான் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குகின்றனா். இதுபோன்ற சூழலில் வா்த்தகா்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் பிரச்னைகளை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மூடப்படும் நேரத்தை நீட்டிப்பது அவசியமாகிறது. மேலும், இரவில் கடைகள் தாமதமாகத் திறந்திருந்தால் சந்தைகளில் கூட்டம் இருக்காது எல்லோரும் வசதியாக பொருள்களை வாங்க முடியும்.   கரோனா விதிகள் உரிய வகையில் பின்பற்றப்பட முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com