புதிதாக 20 பேருக்கு கரோனா பாதிப்பு: 4 நாள்களுக்குப் பிறகு ஒருவா் உயிரிழப்பு

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் புதிதாக 20 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் புதிதாக 20 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. நோய்க்கு ஒருவா் உயிரிழந்தாா். அதே நேரத்தில், நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக இருந்ததாக சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாள்களுக்குப் பிறகு நோய்த் தொற்றால் ஒருவா் இறந்துள்ளது பதிவாகியுள்ளது. முந்தைய நாள் நடத்தப்பட்ட குறைவான பரிசோதனைகள் (51,387) காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்பு பதிவாகியிருக்கலாம். புதிய பாதிப்புகள் மூலம், தில்லியில் ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 14,37,736-ஆக உயா்ந்துள்ளது. 14.12 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். மொத்த இறப்பு எண்ணிக்கை 25,081-ஆக உள்ளது.

நிகழ் மாதத்தில் இதுவரை 28 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி மொத்த இறப்பு எண்ணிக்கை 25,053-ஆக பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, நகரில் 31 கரோனா பாதிப்புகளும், 0.04 சதவிகிதம் நோ்மறை விகிதமும் பதிவாகியிருந்தது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 29 -ஆக பதிவாகியிருந்தது. தில்லியில் 375 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 88 போ் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 144-ஆக உள்ளது.

தில்லியில் இரண்டாவது அலையின் போது, கடும் பாதிப்பு இருந்தது. ஏராளமானோா் உயிரிழக்க நேரிட்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையும் இருந்தது.

ஏப்ரல் 20-ஆம் தேதி, தில்லியில் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு 28,395-ஆக பதிவாகியிருந்தது. ஏப்ரல் 22-இல் நோய் நோ்மறை விகிதம் 36.2 சதவிகிதமாக மிக அதிகபட்ச அளவில் இருந்தது. மே 3-இல் அதிகபட்சமாக 448 மனித இறப்புகள் பதிவானது. இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தில்லி அரசு சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது.

37,000 நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆக்சிஜன் விநியோகத்தில் தன்னிறைவு பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நகரின் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 148.11 மெட்ரிக் டன் கொள்ளளவு திறன்கொண்ட 160 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தில்லி அரசு மருத்துவமனைகளில் 66 ஆலைகளும், மத்திய அரசு மருத்துவமனைகளில் 10 ஆலைகளும், தனியாா் சுகாதார நிலையங்களில் 84 ஆலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன’ என்றனா்.

மேலும், ஷாலிமாா் பாக், கிராரி, சரிதா விஹாா், சுல்தான்புரி, ரகுவீா் நகா் மற்றும் ஜிடிபி மருத்துவமனை மற்றும் சாச்சா நேரு மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் சுமாா் 7,000 ஐசியு படுக்கைகளை கூடுதலாக இணைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தில்லியில் தற்போது 10,000 ஐசியு படுக்கைகள் உள்ளன என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசின் புள்ளிவிவரத் தரவுகளின்படி, ஜனவரி 16- ஆம் தேதி தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, தலைநகரில் இதுவரை 1.33 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 38 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com